திரிபுராவில் லெனின் சிலை அகற்றம்: கூடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


திரிபுராவில் லெனின் சிலை அகற்றம்: கூடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 March 2018 4:15 AM IST (Updated: 8 March 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து கூடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களது ஆர்ப்பாட்டத்துக்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.

கூடலூர்,

வடகிழக்கு மாநிலம் திரி புராவில் ரஷிய தலைவர் விளாடிமீர் லெனின் சிலை அகற்றப்பட்டது. இதை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் போராட்டங்களும் வலுப்பெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று பகல் 1½ மணிக்கு ரஷிய தலைவர் லெனின் சிலையை அகற்றியதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களது ஆர்ப்பாட்டத்துக்கு பல்வேறு கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் வாசு தலைமை தாங்கினார்.

நகர செயலாளர் குஞ்சுமுகமது அனைவரையும் வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட இணை செயலாளர் டி.பாலகிருஷ்ணன், டி.டி.வி. அணி நகர செயலாளர்கள் சையத் அனூப்கான், ராமானுஜம், ஒன்றிய செயலாளர் தம்பி ராமசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன், ம.தி.மு.க. நிர்வாகிகள் பாபு, அண்ணாதுரை, மனித நேய மக்கள் கட்சி யாசீன், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் லீலா ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதேபோல் பெரியார் சிலை குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., டி.டி.வி. அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி மண்வயல் பஜாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சி.கே.மணி தலைமையில் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் சைஜூ, அனில், ஜோஸ், கோபாலன் உள்பட கட்சியினர் கலந்து கொண்டனர். 

Next Story