கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் இடத்துக்கு செல்ல முயன்ற அரசியல் கட்சியினர் கைது


கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் இடத்துக்கு செல்ல முயன்ற அரசியல் கட்சியினர் கைது
x
தினத்தந்தி 8 March 2018 4:15 AM IST (Updated: 8 March 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் இடத்துக்கு செல்ல முயன்ற அரசியல் கட்சியினரை தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

துடியலூர்,

பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சகண்டி ஆகிய இடங்களில் கேரள அரசு ஏற்கனவே தடுப்பணை கட்டி விட்டது. இந்த நிலையில் 3-வதாக சோலையூர் பஞ்சாயம் கோட்டத்துறை அருகே கூடப்பட்டி என்ற இடத்தில் தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு தொடங்கியுள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் அனுமதி பெறாமல் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து கட்சியினர் கூட்டம் கடந்த 3-ந் தேதி கோவையில் நடந்தது. அதில், பவானி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை பார்வையிடுவதற்காக தமிழக அரசியல் கட்சியினர் 7-ந் தேதி (நேற்று) செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழக அரசியல் கட்சியினர் நேற்றுக்காலை கோவையில் இருந்து கார் மற்றும் வேன் மூலம் தமிழக எல்லையான ஆனைகட்டிக்கு சென்றனர். இதனால் தமிழக அரசியல் கட்சியினர் கேரளாவுக்குள் செல்வதை தடுக்கும் வகையில் அங்கு கூடுதல் சூப்பிரண்டு முத்தரசு தலைமையில் ஏராளமான போலீசார் நேற்றுக்காலை முதல் ஆனைகட்டி பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

காலை 10 மணியளவில் கோவையிலிருந்து சென்ற தமிழக அரசியல் கட்சியினர் ஆனைகட்டி சென்றதும் தமிழக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். கேரள எல்லைக்குள் சென்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே அங்கு செல்ல வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதையும் மீறி கேரள பகுதிக்குள் தமிழக அரசியல் கட்சியினர் நுழைய முயன்றனர். அவர் களை போலீசார் இரும்புத்தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து அவர்கள் சாலையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

அதன்பின்னர் அவர்கள் கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதற்கு, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., முத்துசாமி, சி.ஆர்.ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பத்மாலயா சீனிவாசன், சுரேந்திரன் (தி.மு.க.), மற்றும், மாநகர் மாவட்ட செயலாளர் மயூரா ஜெயக் குமார், வி.எம்.சி.மனோகரன், சின்னராஜ், சவுந்தரகுமார், குமரேசன், நவீன்குமார், கோவை போஸ், துளசிராஜ், அசோக் (காங்கிரஸ்), ம.தி.மு.க.வை சேர்ந்த கிருஷ்ணசாமி, சேதுபதி, சூரியநந்தகோபால், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த வடிவேல், ரமேஷ், ஆதிதமிழர் பேரவை தலைவர் அதியமான், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சண்முகம், தன்ராஜ், ராஜகோபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல தலைவர் சுசி கலையரசன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச் சென்று அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். தமிழக-கேரள எல்லையில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். 

Next Story