சேதமடைந்த சாலையை சீரமைக்காததை கண்டித்து கிராம மக்கள் மறியல் போராட்டம்


சேதமடைந்த சாலையை சீரமைக்காததை கண்டித்து கிராம மக்கள் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 8 March 2018 4:30 AM IST (Updated: 8 March 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்காததை கண்டித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள செறுபனையூரில் தொடங்கி மாடன் கோவிலடி வரை 1½ கி.மீ. தூரம் வரை உள்ள சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. மேலும், இப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் வழங்கப்படுவதில்லை. தெரு மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல அச்சபடுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதை கண்டித்து, செறுபனையூர் கிராம மக்கள் நேற்று முன்தினம் உதயமார்த்தாண்டபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகக்குழு உறுப்பினர் தனவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு நிர்வாகிகள் செல்லத்துரை, வீரமணி, கனகசுந்தரம், கிளை செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு சேதமடைந்த சாலையை சீரமைக்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி மற்றும் ஒன்றிய அதிகாரிகள், போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story