காவலர் தேர்வில் முறைகேடு: போலீஸ் ஐ.ஜி.யின் நிர்வாக அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை


காவலர் தேர்வில் முறைகேடு: போலீஸ் ஐ.ஜி.யின் நிர்வாக அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
x
தினத்தந்தி 8 March 2018 3:30 AM IST (Updated: 8 March 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

காவலர் தேர்வில் முறைகேடு தொடர்பாக போலீஸ் ஐ.ஜி.யின் நிர்வாக அதிகாரியின் மதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

மதுரை,

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் காவலர் தேர்வுக்கான இரண்டாம் கட்ட உடல் தகுதித்தேர்வுகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்தது.

அப்போது அந்த தேர்வு பணியில் அமைச்சு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். உடல் தகுதித்தேர்வில் நீளம், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், கயிறு ஏறுதல் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் தகுதி பெற்றவர்களின் இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டது. அப்போது 4 தேர்வர்களின் மதிப்பெண்கள் பட்டியலில் தேர்வுக்குழு இன்ஸ்பெக்டரின் கையொப்பம் இல்லாமல் இருந்தது.

மேலும் அந்த 4 பேரும் அனைத்து தேர்வுகளிலும் பங்கேற்று தகுதி பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த இன்ஸ்பெக்டர், அந்த 4 பேரும் தகுதித்தேர்வில் பங்கேற்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். ஆனால் அங்கு பணியில் இருந்த அமைச்சு பணியாளர்கள் மற்றும் ஆயுதப்படை போலீஸ்காரர் ஆகியோர் அந்த தேர்வர்கள் அனைத்து தகுதி தேர்வுகளிலும் பங்கேற்றதாக கூறினர்.

இதனால் சந்தேகம் அடைந்த இன்ஸ்பெக்டர் அந்த 4 தேர்வர்களையும் தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். இதில் 3 பேர் காவலர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதும், மற்றொருவர் ஆயுதப்படை காவலரின் உறவினர் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அமைச்சு பணியாளர்களும், ஆயுதப்படை போலீஸ்காரரும் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக மதுரை சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. அதைதொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சு பணியாளர்கள் பாலமுருகன், முரளிதரன் மற்றும் ஆயுதப்படை போலீஸ்காரர் முருகேசன் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் இந்த சம்பவத்தில் மதுரை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனின் நிர்வாக அதிகாரியாக இருந்த அமைச்சு பணியாளர் குமார் என்பவருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் நடந்து வந்தன. இந்தநிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள போலீஸ் ஐ.ஜி. ஒருவரிடம் நிர்வாக அதிகாரியாக மாறுதலாகி சென்று விட்டார்.

இதற்கிடையில் மதுரை ஆனையூர் மல்லிகை தெருவில் உள்ள குமாரின் வீட்டிற்கு நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். அவர்கள் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டு, வீட்டில் உள்ளவர்களிடம் பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரது வீட்டில் இருந்து ஆவணங்களை போலீசார் கைப்பற்றினார்களா? என்று கேட்டபோது, அவர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

சென்னை ஐ.ஜி.யின் நிர்வாக அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story