காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தி.மு.க. வலியுறுத்தல்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தி.மு.க. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 March 2018 10:30 PM GMT (Updated: 7 March 2018 8:19 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க புதுவை சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

புதுவை தெற்கு மாநில தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொகுதி செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.பி. சி.பி.திருநாவுக்கரசு, துணை அமைப்பாளர்கள் குணாதிலீபன், அமுதாகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, பொதுக் குழு உறுப்பினர்கள் மாறன், வேலவன், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், சீத்தாராமன், இளைஞர் அணி அமைப்பாளர் முகமது யூனுஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

*தமிழகத்தில் பெரியாரின் சிலைகளை அகற்றுவோம் என்று திமிராக கருத்து வெளியிட்ட பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிப்பது. மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி ஏற்பட்ட காலம் முதல் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கு புறம்பாகவும், இணக்கமாக வாழ்ந்து வரும் பொதுமக்களிடையே குரோதத்தை விதைத்து வன்முறையை தூண்டிவிடும் விதத்தில் தொடர்ந்து பேசி வரும் எச்.ராஜா மீது குண்டர் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து கைது செய்யவேண்டும்.

*திரிபுராவில் வெற்றிபெற்ற ஒருசில நாட்களிலேயே வன்முறையில் இறங்கி லெனின் சிலையை உடைத்து ஜனநாயக படுகொலை செய்த பாரதீய ஜனதாவை வன்மையாக கண்டிப்பது.

*காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக்கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் புதுவை சட்டமன்றத்தை கூட்டி ஒட்டுமொத்தமாக தீர்மானம் நிறை வேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

*லிங்காரெட்டிபாளையத்தில் இயங்கிவரும் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு லே ஆப் கொடுக்கப்பட்டு தனியாருக்கு கொடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதை கண்டிப்பது. ஆலை இயங்குவதற்கு மாற்று வழியை கண்டுபிடித்து அரசே மீண்டும் ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

*ஈரோட்டில் வருகிற 24, 25-ந்தேதிகளில் நடைபெறும் மண்டல மாநாட்டில் தெற்கு மாநில கழகம் சார்பில் முன்னோடிகளும், தொண்டர்களும் பெருந்திரளாக கலந்துகொள்வது.

*உள்ளாட்சியில் சுகாதார சீர்கேடு அதிகரித்து வருவதாலும், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக இந்த அரசு நடத்திட வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story