மணல் கடத்தி சென்ற மினிலாரி மோதி விவசாயி பலி பொதுமக்கள் சாலை மறியல்


மணல் கடத்தி சென்ற மினிலாரி மோதி விவசாயி பலி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 March 2018 11:00 PM GMT (Updated: 7 March 2018 8:24 PM GMT)

சேத்துப்பட்டில் மணல் கடத்தி சென்ற மினி லாரி மோதி விவசாயி உயிரிழந்தார். பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேத்துப்பட்டு,

சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள தெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் உதயசங்கர் (வயது 35), விவசாயி. இவர், நேற்று விண்ணமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். தனது கிராமத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது செய்யாறு ஆற்றுப்பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்த மினி லாரி திடீரென உதயசங்கர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் உதயசங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் தெள்ளூர் கிராம மக்கள் மற்றும் உதயசங்கரின் உறவினர்கள் ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் விண்ணமங்கலம் ஆறு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், எங்கள் ஊர் வழியாக மணல் கடத்தி செல்லும் லாரிகள் வரக்கூடாது என்று கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்யாறு உதவி கலெக்டர் (பொறுப்பு) அரிதாஸ், போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ், சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் ஜோதி, சேத்துப்பட்டு தாசில்தார் அரிதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதைத் தொடர்ந்து போலீசார் உதயசங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காலை 10.30 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் மதியம் 1 மணி வரை நடந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரியகொழப்பலூர் கிராமத்தை சேர்ந்த மினிலாரி டிரைவர் சுந்தரசாமியை கைது செய்தனர்.

இறந்த உதயசங்கருக்கு விஜயலட்சுமி (25) என்ற மனைவியும், காவ்யா (9) என்ற மகளும், சரவணன் (7), சரண் (5) என்ற 2 மகன்களும் உள்ளனர்.


Next Story