மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் உருவபொம்மையும் எரிப்பு


மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் உருவபொம்மையும் எரிப்பு
x
தினத்தந்தி 7 March 2018 11:00 PM GMT (Updated: 7 March 2018 8:56 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சில இடங்களில் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.

நாமக்கல்,

திரிபுரா மாநிலத்தில் உள்ள மெலோனியா நகரில் 2 நாட்களுக்கு முன்பு, முந்தைய சோவியத் ரஷியாவின் மறைந்த பிரபல தலைவர் விளாடிமீர் லெனின் சிலை திடீரென அகற்றப்பட்டதை கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலைகளை அகற்றுவோம் என முகநூலில் பதிவிட்ட பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். இதில் செயற்குழு உறுப்பினர் ரெங்கசாமி, திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் பெரியசாமி, காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் சித்திக், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல நாமக்கல் மணிக்கூண்டு அருகே தி.மு.க.வினர் எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் எச்.ராஜாவின் உருவபொம்மையை கைப்பற்றி, தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இந்த போராட்டத்துக்கு நகர பொறுப்பாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கணேசன், வக்கீல் அணி ஈஸ்வரன் மற்றும் நகராட்சி முன்னாள் தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த உருவபொம்மை எரிப்பு சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் தி.மு.க.வை சேர்ந்த 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், திராவிடர் கழகம் உள்பட அனைத்து அரசியல் கட்சி அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன் முன்னிலை வகித்தார். நகர ம.தி.மு.க. செயலாளர் ஜோதிபாசு, நகர தி.மு.க. செயலாளர் என்.ஆர்.சங்கர், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.பாலு, மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி தலைவர் மெய்ஞானமூர்த்தி, முன்னாள் மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஏ.ஆர்.துரைசாமி, ராசிபுரம் நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராமுலு மோகன், தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர்கள் அருள், தவசி நந்தகுமார், திராவிடர் விடுதலை கழக நகர தலைவர் பிடல் சேகுவாரா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மணிமாறன் உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மனிதநேய மக்கள் கட்சியினர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

குமாரபாளையத்தில் பள்ளிபாளையம் பிரிவு அருகில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க. சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.சேகர், நகர செயலாளர் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஈஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிபாளையம் பஸ் நிலைய 4 ரோட்டில் பள்ளிபாளையம் நகர திராவிடர் கழகத்தின் சார்பில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கிளை செயலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது எச்.ராஜாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய திராவிடர் கழகத்தினர், அவரது படத்தையும் கையில் வைத்து தீயிட்டு கொளுத்தினர். அதை போலீசார் அணைத்தனர்.

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் நான்கு ரோடு பகுதியில் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சியினர் சார்பில் எச்.ராஜாவை கண்டித்தும், அவரை கைது செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் வேலூர் - ஜேடர்பாளையம் நெடுஞ்சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் பெரியார் சிலை முன்பு திராவிடர் விடுதலை கழகம் சார்பில் எச்.ராஜாவை கண்டித்து மாவட்ட செயலாளர் வைரவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 12 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதேபோல நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சில இடங்களில் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது. 

Next Story