8-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை


8-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 8 March 2018 4:00 AM IST (Updated: 8 March 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

8-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான்.

ஆட்டையாம்பட்டி,

ஆட்டையாம்பட்டி அருகே தாயார் திட்டியதால் ஆத்திரம் அடைந்த 8-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான்.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள இருசனாம்பட்டி சங்கர்நகரை சேர்ந்தவர் முருகேசன். தறித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகன் அருண்குமார்(வயது13) அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 5-ந்தேதி காலையில் அருண்குமார் வழக்கம்போல் பள்ளிக்கூடம் சென்றான். பின்னர் காலை 11½ மணிக்கு பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தான். அப்போது அவனது தாயார் லட்சுமி, பள்ளிக்கூடத்தில் ஒழுங்காக படிக்காமல் ஏன் இடையில் வந்தாய்? என்று கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆத்திரம் அடைந்து வீட்டை விட்டு வெளியில் சென்ற அருண்குமார் பின்னர் வீடு திரும்ப வில்லை.

இந்தநிலையில் நேற்று காலை சென்னகிரி நசியன்காடு பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் மாணவன்அருண்குமார் பிணமாக மிதந்தான். இந்த தகவல் ஊர்மக்கள் மத்தியில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சேலத்தில் உள்ள தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அருண்குமார் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர்.

மேலும் சம்பவ இடத்துக்கு சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கரநாராயணன், ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில், தாயார் திட்டியதால் ஆத்திரம் அடைந்த அருண்குமார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் அருண்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த அருண்குமாரின் உடலை பார்த்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது உருக்கமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story