எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு


எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 March 2018 5:00 AM IST (Updated: 8 March 2018 4:00 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூரில் உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமலூர்,

பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஓமலூரில் உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்ததாகக்கூறி பல்வேறு அரசியல் கட்சியினர் அவருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஓமலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை முன்பு நேற்று திராவிடர் கழகம், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தந்தை பெரியாரை அவமதித்து பேசிய பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திராவிடர் கழகத்தின் சுய மரியாதை குழு உறுப்பினர் புள்ளையண்ணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் குப்புசாமி, முன்னாள் நகர செயலாளர் ரவிச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சாமுராய்குரு, மணிகுமார், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் ஜெயமோகன், மாவட்ட தலைவர் முருகன் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர், அவர்கள் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

அப்போது, சிலர் எச்.ராஜாவின் உருவபொம்மையை கொண்டு வந்து அதற்கு தீ வைத்து எரித்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அந்த உருவ பொம்மையில் தண்ணீரை ஊற்றி அணைத்து அதை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

நங்கவள்ளி
நங்கவள்ளி பஸ் நிலையத்தில் எச்.ராஜாவை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் பழ.ஜீவானந்தம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பிரமுகர்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவின் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து போராட்டம் நடத்தினர்.

ஆத்தூர்
எச். ராஜாவை கண்டித்து ஆத்தூர் பழைய பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் த.வானவில் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னதுரை, நகர தி.மு.க. செயலாளர் கே.பாலசுப்ரமணியன், துணை செயலாளர் ராமச்சந்திரன், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் ஒசு மணி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கோபால்ராஜ் மற்றும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜாவின் உருவப்படத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.

கொளத்தூர்
கொளத்தூர் பஸ் நிலையத்தில் எச்.ராஜாவை கண்டித்து அவரது உருவ பொம்மையை தி.மு.க.வினர் எரிக்க முயன்றனர். அவர்களை கொளத்தூர் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story