மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மகளிர் தின விழா பெண்கல்விக்கு பெற்றோர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மகளிர் தின விழா பெண்கல்விக்கு பெற்றோர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 March 2018 2:00 AM IST (Updated: 8 March 2018 9:08 PM IST)
t-max-icont-min-icon

பெண் கல்விக்கு பெற்றோர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், என பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்தார்.

பேட்டை,

பெண் கல்விக்கு பெற்றோர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், என பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்தார்.

மகளிர் தினவிழா

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மகளிர் தினவிழா நேற்று வ.உ.சி. அரங்கில் நடந்தது. பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு வரவேற்றார். துணைவேந்தர் பாஸ்கர் தலைமை வகித்து பேசினார். அவர் பேசுகையில்,‘ பெற்றோர், தங்களுடைய பெண்குழந்தைகளுக்கு ஆண்களுக்கு நிகராக வளர்க்க வேண்டும். பெண்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். சிறந்த கல்வி அறிவு பெற்றால் தான், சமுதாயத்தில் நன்மதிப்பு கிடைக்கும். வேலைவாய்ப்பும் எளிதாக கிடைக்கும். இதன் மூலம் பொருளாதாரம் உயர்வதோடு, குடும்பத்தின் நிலையும் உயரும். இதன் மூலம் கிராமம் வளரும். இதன் தொடர்ச்சியாக நாடும் வளர்ச்சி பாதையில் செல்லும். எனவே, பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க பெற்றோர்கள் முன் வரவேண்டும், என்றார்.

திருநங்கை பேச்சு

இந்த விழாவில் திருநங்கையான போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ப்ரிதிகா யாசினி பேசும் போது,‘ பெண்கள் பல துறைகளில் சாதனை படைத்து வருகிறார்கள். பெண்களுக்கு சமூகத்தில் நிகழும் பல்வேறு பிரச்சினைகளை தன்னம்பிக்கை, விடாமுயற்சி கொண்டு வெற்றி பெறலாம். வாழ்வில் இலக்கை அடைய தடைக்கற்களை உடைத்தெறிந்து லட்சியம் ஒன்றே குறிக்கோளாக கொம்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். இதன் மூலம் நம் சந்ததியர் சிறந்த நிலையை அடைவார்கள்’ என்றார்.

சிறப்பு விருந்தினராக கனடா நாட்டை சேர்ந்த டாக்டர் பெலிண்டா பென்னட், எழுத்தாளரும் ஆராய்ச்சியாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ராகுல்ராய் சமோக், இயக்குனர் ஆனந்த் பவார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கணினி துறை பேராசிரியை ஆரோக்கிய ஜான்சிராணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை குற்றவியல் மற்றும் குற்றநீதியியல் துறை தலைவர் பேராசிரியை பியூலா சேகர் செய்திருந்தார்.

Next Story