பராமரிப்பு இன்றி காணப்படும் பட்டாபிராம் பஸ் நிலையம்


பராமரிப்பு இன்றி காணப்படும் பட்டாபிராம் பஸ் நிலையம்
x
தினத்தந்தி 9 March 2018 3:15 AM IST (Updated: 9 March 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு இன்றி காணப்படும் பட்டாபிராம் பஸ் நிலையத்தை சீர் அமைப்பதற்கான நடவடிக்கைகளை நகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆவடி,

ஆவடியை அடுத்த பட்டாபிராம் சி.டி.எச். சாலையில் பட்டாபிராம் போலீஸ் நிலையம் அருகே பஸ் நிலையம் உள்ளது.

இந்த பஸ் நிலையத்தை சுற்றி உள்ள வள்ளலார் நகர், கோபாலபுரம், சோழன் நகர், காந்தி நகர், சார்லஸ் நகர், பி.டி.எம்.எஸ், கரிமேடு, சாஸ்திரி நகர், பாபு நகர், காமராஜர்புரம், நெமிலிச்சேரி, தேவராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்ல இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பஸ் நிலையத்தில் இருந்து தாம்பரம், அண்ணா சதுக்கம், பொன்னேரி, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், பாடி, செங்குன்றம், திருமங்கலம், நுங்கம்பாக்கம், கிண்டி, பல்லாவரம், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஆண்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த பஸ் நிலையம் உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. இங்கு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை.

குறிப்பாக பஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள ஆவடி நகராட்சி பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை சுற்றிலும் புதர் மண்டி கிடக்கிறது.

பஸ் நிலையத்தின் பெயர் தெரியாதவாறு விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பஸ் நிலையத்தில் பொதுமக்கள் அமருவதற்கு போதுமான இருக்கைகள் இல்லை.

மேலும் அங்கு குடிநீருக்காக வைக்கப்பட்டுள்ள தொட்டி தண்ணீர் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. தற்போது வெயில் காலமாக இருப்பதால் பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றனர்.

அது மட்டும் இன்றி, பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘நம்ம டாய்லெட்’ பயன்பாடு இன்றி மூடி கிடக்கிறது. இதனால் பலர் பஸ் நிலையத்துக்கு உள்ளேயே சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.

கடந்த 03-08-2015 அன்று அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்ட தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, பலமாதங்களாக மூடியே கிடக்கிறது.

மேலும், அவ்வப்போது பஸ் நிலையத்தில் உள்ள மின் விளக்குகள் பழுதாகிவிடுகின்றன. இதனால் இரவு நேரங்களில் பஸ் நிலையம் இருளில் மூழ்கி விடுகிறது. அதனை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் பஸ் நிலையத்துக்குள் மது அருந்துவது, பெண் பயணிகளிடம் தகாத முறையில் நடப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஆவடி நகராட்சி அதிகாரிகள் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு பட்டாபிராம் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story