மாவட்ட செய்திகள்

கட்சி கொடியை அகற்றும்படி பா.ஜ.க. மாவட்ட தலைவருக்கு மிரட்டல் + "||" + Remove the party flag BJP Threat to the district head

கட்சி கொடியை அகற்றும்படி பா.ஜ.க. மாவட்ட தலைவருக்கு மிரட்டல்

கட்சி கொடியை அகற்றும்படி பா.ஜ.க. மாவட்ட தலைவருக்கு மிரட்டல்
கட்சி கொடியை அகற்றும்படி பா.ஜ.க. மாவட்ட தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,

பா.ஜ.க. திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவராக இருப்பவர் லோகநாதன். இவர் நேற்று முன்தினம் திருப்பதிக்கு சென்று விட்டு சென்னை பாரிவாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு காரில் திருவள்ளூர் வழியாக வந்து கொண்டிருந்தார். அவர் திருவள்ளூரை அடுத்த திருமழிசை அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் காரில் பெட்ரோல் போடுவதற்காக சென்றார்.


அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் லோகநாதன் காரில் இருந்த பா.ஜ.க. கொடியை பார்த்தவுடன் தந்தை பெரியார் சிலையை அகற்றுவோம் என எப்படி உங்கள் கட்சியியை சேர்ந்த எச்.ராஜா கூறுவார் எனவும், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் ஒன்றும் செய்யமுடியாது, மோடியால் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்யமுடியாது என்று கூறிய அவர்கள் லோகநாதனிடம் அந்த காரில் இருந்த கட்சிகொடியை அகற்றவேண்டும் என்று மிரட்டல் விடுத்தனர். அதற்கு லோகநாதன் மறுப்பு தெரிவித்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவருடன் இருந்தவர்கள் அந்த 3 பேரையும் பிடிக்க முயன்றனர் அதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

அப்போது ஒருவரது செல்போன் தவறி கீழே விழுந்தது. அதை எடுத்துக்கொண்ட பா.ஜ.க. நிர்வாகிகள் வெள்ளவேடு போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு லோகநாதன் தனக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். ஆனால் போலீசார் இரவு வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜ.க. நிர்வாகிகள் வழக்குப்பதிவு செய்ய மறுக்கும் போலீசாரை கண்டித்து நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் திருவள்ளூர்-திருப்பதி நெடுஞ்சாலையான வெள்ளவேடு போலீஸ்நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

அந்த நேரத்தில் அங்கிருந்த மர்ம நபர்கள் சிலர் சாலையில் எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகளை அணைத்துவிட்டு மறியலில் ஈடுபட்டவர்கள் மீது கற்களை வீசினர். அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகள் மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கற்களை வீசியவர்களை கைது செய்யக்கோரியும் தங்கள் மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

அப்போது போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த வழித்தடத்தில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.