மாவட்ட செய்திகள்

பெண் விமானிகளால் இயக்கப்பட்ட விமானம் கோவை வந்தது + "||" + Female pilots Enabled aircraft

பெண் விமானிகளால் இயக்கப்பட்ட விமானம் கோவை வந்தது

பெண் விமானிகளால் இயக்கப்பட்ட விமானம் கோவை வந்தது
உலக மகளிர் தினத்தையொட்டி பெண் விமானிகளால் இயக்கப்பட்ட ‘ஏர் இந்தியா’ விமானம் சென்னையில் இருந்து நேற்று கோவைக்கு வந்தது. விமான நிலையத்தில் விமானிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை,

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனம் சார்பில் முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்பட்ட விமானம் சென்னை- கோவை இடையே நேற்று இயக்கப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் நேற்று மதியம் 2.20 மணிக்கு கோவையில் தரை இறங்கியது.


போயிங் ரகத்தை சேர்ந்த அந்த விமானத்தில் மொத்தம் 135 பயணிகள் வந்தனர். அந்த விமானத்தை கேப்டன் ரம்யா, உதவி கேப்டன் பிருந்தா நாயர் ஆகியோர் இயக்கினார்கள். மேலும் விமான பணி பெண்கள் 5 பேரும் அதில் வந்தனர். விமானம் தரை இறங்கியதும் அதை இயக்கிய கேப்டன் ரம்யா, உதவி கேப்டன் பிருந்தா நாயர் மற்றும் விமான பணி பெண்கள் உற்சாகத்துடன் விமானத்தில் இருந்து இருகைகளையும் அசைத்தவாறு இறங்கி வந்தனர்.

அவர்களை கோவை விமான நிலைய இயக்குனர் பால் மாணிக்கம், ஏர்இந்தியா விமான நிறுவன மேலாளர் கிரிஜா மற்றும் விமான நிலைய அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் விமானத்தை இயக்கிய கேப்டன், உதவி கேப்டன் மற்றும் பணி பெண்கள் ஆகியோர் சேர்ந்து கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினார்கள்.

அதன் பின்னர் விமான கேப்டன் ரம்யா நிருபர்களிடம் கூறும்போது, ‘ஏர் இந்தியா’ நிறுவனம் பெண்களுக்கு பெரிதும் ஆதரவு அளித்து வருகிறது. இதுபோன்ற தருணம் பெருமை அளிக்கக்கூடியது என்பதால் பல பெண்கள் இது போன்ற துறைக்கு வர வேண்டும். ஆண்களும், பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், என்று கூறினார்.

பெண்களால் இயக்கப்பட்டு சென்னையில் இருந்து கோவை வந்த விமானம் நேற்று மதியம் 3.10 மணிக்கு 145 பயணிகளுடன் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டது. அந்த விமானத்தை பெண் விமானிகளே இயக்கினார்கள்.முன்னதாக மகளிர் தினத்தையொட்டி கோவை விமான நிலையத்தில் பெண்கள் உரிமைகள் பற்றி யோகா பாட்டி நானம்மாள் பேசினார். மேலும் விமான நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த நாப்கின் வழங்கும் எந்திரத்தை உதவி கலெக்டர் சரண்யா அரி தொடங்கி வைத்தார். மேலும் இண்டிகோ விமான நிறுவனத்தின் பணி பெண்களின் நடனம் நடைபெற்றது. இதை பார்வையாளர்களும், பயணிகளும் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.