ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 ஆயிரத்து 935 குழந்தைகள் பிறப்பு


ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 ஆயிரத்து 935 குழந்தைகள் பிறப்பு
x
தினத்தந்தி 9 March 2018 4:15 AM IST (Updated: 9 March 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 ஆயிரத்து 935 குழந்தைகள் பிறந்துள்ளன.

திண்டுக்கல்,

தமிழகத்தில் பிரசவத்தின் போது குழந்தைகள் இறப்பை தடுக்கும் வகையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நவீன மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.13½ லட்சம் செலவில் சிசு தீவிர பராமரிப்பு பிரிவு தொடங்கப்பட்டது. இந்த பிரிவு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சுழற்சி முறையில் மருத்துவர்கள், நர்சுகள் பணியாற்றுகின்றனர்.

அதுதவிர ரூ.23½ லட்சம் செலவில் குழந்தைகளுக்கு செயற்கை சுவாச கருவி, குழந்தைகள் இருக்கும் இடத்துக்கே சென்று எக்ஸ்ரே எடுப்பதற்கு ரூ.1½ லட்சத்தில் நவீன நகரும் எக்ஸ்ரே கருவி வழங்கப்பட்டன. மேலும் 700 கிராம் எடையில் பிறக்கும் குழந்தைகள் இயல்பான எடைக்கு கொண்டு வருவதற்கு சிறப்பு சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

அந்தவகையில் 2017-2018-ம் ஆண்டில் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் 5 ஆயிரத்து 684 குழந்தைகள் பிறந்துள்ளன. திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் உள்ள வட்டார அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 ஆயிரத்து 634 குழந்தைகளும், பழனி சுகாதார மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,617 குழந்தைகளும் பிறந்துள்ளன.

இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 80 சதவீத குழந்தைகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் குழந்தைகளுக்கான உயிர் காக்கும் மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 35 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள் மூலம் கர்ப்பிணிகளின் விவரம் பதிவு செய்யப்பட்டு, குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான இணை உணவுகள் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

மேலும் 2 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி, மதிய உணவு ஆகியவை வழங்கப்படுகின்றன. அதன்படி மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு 91 ஆயிரத்து 96 குழந்தைகள், 12 ஆயிரத்து 458 கர்ப்பிணிகள், 10 ஆயிரத்து 376 பாலூட்டும் தாய்மார்களுக்கு அங்கன்வாடி மையங்களின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தகவல் திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story