ரூ.6 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு மையம்


ரூ.6 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு மையம்
x
தினத்தந்தி 8 March 2018 10:30 PM GMT (Updated: 8 March 2018 9:14 PM GMT)

ஆண்டிப்பட்டி பேரூராட்சியில், முதற்கட்டமாக 2 வார்டுகளில் ரூ.6 லட்சம் செலவில் புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் ஒரு வீட்டுக்கு 2 குடம் வீதம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள குடியிருப்புகளுக்கு வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வறட்சி காரணமாக அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சீராக வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் கடந்த ஆண்டு அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கேட்டு ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை அடிக்கடி முற்றுகையிட்டு வந்தனர்.

இதை தொடர்ந்து கூட்டுக்குடிநீர் சரிவர கிடைக்காத பகுதிகளில் மாற்று ஏற்பாடாக ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் அந்த தண்ணீர் குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. எனவே ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் ஆழ்துளை கிணற்றில் இருந்து பெறும் தண்ணீரை சுத்திகரித்து வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

முதற்கட்டமாக 17-வது மற்றும் 18-வது வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.6 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு மையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மையத்தின் மூலம் தினமும் ஒரு வீட்டுக்கு 2 குடம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குடிநீர் சுத்திகரிப்பு மையம் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story