பெரம்பலூர், அரியலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் தேர்வு திருச்சியில் நடந்தது


பெரம்பலூர், அரியலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் தேர்வு திருச்சியில் நடந்தது
x
தினத்தந்தி 9 March 2018 4:15 AM IST (Updated: 9 March 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் தேர்வு திருச்சியில் நடந்தது.

திருச்சி,

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க போவதாக கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி அறிவித்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இதனை தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் தீவிர உறுப்பினர் சேர்க்கை மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அடுத்த கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர், மாநில பொதுச்செயலாளர் ராஜூமகாலிங்கம் ஆகியோர் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இந்தநிலையில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று காலை நடந்தது. அப்போது காலை 10.30 மணி அளவில் ரசிகர்கள் முன்பு ரஜினி பேசிய வீடியோ பதிவு ஒளிபரப்பப்பட்டது. அதில் ரஜினிகாந்த் பேசியதாவது:-

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட ரசிகர்களுக்கு வணக்கம். நாம் ஒற்றுமை, ஒழுக்கம், கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அது தான் மிக முக்கியம். நாம் எதையும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். இதில் சுயநலம் கிடையாது. பொதுநலம் தான். ஆண்டவன் கொடுத்த வாய்ப்பை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஏற்கனவே கூறியதைபோல உங்கள் பெற்றோரையும், குடும்பத்தையும் முதலில் பார்த்து கொள்ளுங்கள். நமக்குள் எந்த சண்டை, சச்சரவுகளுக்கும் இடம் கொடுக்கக்கூடாது. எனக்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுப்பீர்கள். கொடுக்க வேண்டும். ஆண்டவன் இருக்கிறான். நான் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில நிர்வாகி சுதாகர் பேசும்போது, “தலைவர் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறாரோ, அதனை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். எல்லோரும் அரசியல் அறிவு பெற்று இருக்க வேண்டும். நகர, ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். செயலாளர், இணை செயலாளர், 3 துணை செயலாளர்கள், 5 செயற்குழு உறுப்பினர்கள் ஆக ஒன்றியத்துக்கு 10 பேர் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமே சமமான அதிகாரம் இருக்கும்“ என்றார்.பின்னர் நிர்வாகிகள் தேர்வு செய்யும் பணி தொடங்கியது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் விண்ணப்பப்படிவம் கொடுத்து அதில் முகவரி, எத்தனை ஆண்டுகளாக மன்றத்தில் உள்ளனர், எந்த பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன. அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனைவரும் கொடுத்தனர். இன்று(வெள்ளிக்கிழமை) நாகை மற்றும் திருவாரூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 

Next Story