வாலிபரை ஜாமீனில் விடுவித்ததை கண்டித்து பாம்பன் பாலத்தில் சாலை மறியல்


வாலிபரை ஜாமீனில் விடுவித்ததை கண்டித்து பாம்பன் பாலத்தில் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 March 2018 10:14 PM GMT (Updated: 8 March 2018 10:14 PM GMT)

முகநூலில் திருக்குரான் பற்றி இழிவாக பதிவு செய்த வாலிபரை ஜாமீனில் விடுவித்ததை கண்டித்து பாம்பன் பாலத்தில் சாலை மறியல் நடந்தது.

ராமேசுவரம்,

பாம்பன் மாயாபஜாரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது26). இவர் நேற்று முன்தினம் தனது முகநூலில் திருக்குரானையும், நபிகள் நாயகம் பற்றியும் இழிவாக பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாம்பனை சேர்ந்த ஹமீது உசேன் என்பவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதன்பேரில் பாம்பன் போலீசார் வழக்கு பதிந்து சதீஷ்குமாரை கைது செய்து ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி வாலிபர் சதீஷ்குமாரை நீதிமன்ற ஜாமீனில் விடுவித்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பாம்பன் முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பாம்பன் ரோடு பாலத்தில் திரண்டு வாலிபர் சதீஷ்குமாரை சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பாம்பன் பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

தகவல் அறிந்ததும் ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், தாசில்தார் கணபதிகாந்தம் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தங்கச்சிமடம் முரளி, மண்டபம் ராமலட்சுமி, பாம்பன் சப்-இன்ஸ்பெக்டர் குகனேசுவரன் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாலிபர் சதீஷ்குமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்வதாகவும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பதாகவும் போலீஸ் துணை சூப்பிரண்டு உறுதி அளித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story