மகளிர் தினவிழா கொண்டாட்டம்


மகளிர் தினவிழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 8 March 2018 10:41 PM GMT (Updated: 8 March 2018 10:41 PM GMT)

மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி மேலத்தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. அத்துடன் மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் நமீஷா பானு உத்தரவின்பேரில் நடைபெற்ற விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் சுபசங்கரி தலைமை தாங்கினார். அப்போது மக்கள் தொகை பெருக்கத்தை குறைத்தல் மற்றும் குடும்ப கட்டுப்பாடு முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். பின்னர் மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினர். இந்த விழாவில் மருத்துவ அதிகாரி மலர்விழி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லீலாவதி, பிரான்மலை சுகாதார செவிலியர் சின்னத்தேவி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக மகளிர் தினவிழா, தலைமை ஆசிரியை பஞ்சு தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக முள்ளிக்குண்டு புனித சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் மைக்கேல் சகாய அன்பு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவர்களுக்கு “பெண்கள் நாட்டின் கண்கள்” என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல் காரைக்குடியில் உள்ள ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் காரைக்குடி பெர்ல் சங்கமம் இன்ட்ராக்ட் சங்கம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அழகுசுந்தரம் தலைமை தாங்கினார். ஸ்ரீராஜராஜன் கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். ஆசிரியர் சித்ரா வரவேற்றார். தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி பேராசிரியை கண்மணி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் ஆசிரியர்கள் கோமதி ஜெயம், மீனாட்சி, இன்ட்ராக்ட் சங்கத்தலைவர் ஆரோக்கிய கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சூரக்குடியை அடுத்த தங்கப்பட்டியில் உள்ள முத்தையா முதன்மை சுகாதார நல மையத்தில் மகளிர் தினவிழா, சூரக்குடி அரசு மருத்துவமனை டாக்டர் ஷீலா தலைமையில் கொண்டாடப்பட்டது. மூத்த சுகாதார பணியாளர் அடைக்கம்மை வாழ்த்துரை வழங்கினார். வளர் இளம் பெண்கள் ஒருங்கிணைப்பாளர் மேரி சிறப்புரையாற்றினார். விழாவில் சுகாதார பணியாளர் அன்னலட்சுமி, செங்காயி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story