மாவட்ட செய்திகள்

எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் செருப்பு வீசப்பட்டது + "||" + Opposed to H. Raja Picket shuffle dropped

எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் செருப்பு வீசப்பட்டது

எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் செருப்பு வீசப்பட்டது
காரைக்குடிக்கு வந்த எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். செருப்பும் வீசப்பட்டது.
காரைக்குடி,

திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றியது போன்று, தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து எச்.ராஜா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும் தி.மு.க., ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்ட எச்.ராஜா தனது சொந்த ஊரான காரைக்குடிக்கு நேற்று காரில் வந்தார். அவரது காருக்கு முன்னும், பின்னும் 10-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் பாதுகாப்புக்காக வந்தன.

காரைக்குடி பழைய பஸ் நிலையம் அருகில் பா.ஜனதாவினர் எச்.ராஜாவுக்கு வரவேற்பு கொடுத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

முன்னதாக எச்.ராஜா கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, காரைக்குடி பழைய பஸ் நிலையம் அருகில், தி.மு.க., திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சேர்ந்து கருப்புக் கொடி காட்டினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர்.

ஆனால் அவர்கள் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து மறியல் செய்த தி.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி, மாவட்ட தலைவர் அரங்கசாமி, செயலாளர் வைகறை, தலைமைக்கழக பேச்சாளர் பிராட்லா, தி.மு.க. நகர செயலாளர் குணசேகரன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காமராஜர் கக்கன் பேரவை உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 40 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

முன்னதாக எச்.ராஜா திண்டுக்கல்லில் இருந்து திருப்பத்தூர், சிங்கம்புணரி வழியாக காரைக்குடிக்கு வந்தபோது திருப்பத்தூர் பகுதியில் அவரது கார் மீது மர்ம நபர்கள் செருப்பு வீசினர். போலீசார் வருவதற்குள் அந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். மேலும் திருப்பத்தூரில் எச்.ராஜாவுக்கு கருப்புக்கொடி காட்டிய 26 பேர் கைது செய்யப்பட்டனர். சிங்கம்புணரியிலும் எச்.ராஜாவுக்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.