மாவட்ட செய்திகள்

குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் + "||" + Request for distribution of drinking water Public road stroke

குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி, கைக்காலன்குட்டை, கணபதி நகர் ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு பவானிசாகர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பவானி ஆற்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் புங்கம்பள்ளியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலமும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.


இந்த நிலையில் புங்கம்பள்ளி, கைக்காலன்குட்டை, கணபதி நகர் ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு புங்கம்பள்ளி பஸ் நிறுத்தத்துக்கு காலை 10.30 மணி அளவில் வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கோவை- சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் புஞ்சைபுளியம்பட்டி வட்டார வளர்ச்சி அதிகாரி சுமதி மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதிக்கு பவானி ஆற்று குடிநீர் 8 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. அதுவும் எங்களுக்கு போதுமானதாக கிடைக்கவில்லை. மேலும் புங்கம்பள்ளியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வற்றிவிட்டதால் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக எங்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதன்காரணமாக நாங்கள் அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து சென்று தண்ணீர் பிடித்து வந்தோம்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு வட்டார வளர்ச்சி அதிகாரி சுமதி கூறுகையில், ‘புங்கம்பள்ளி ஊராட்சி பகுதிகளுக்கு இன்னும் 2 நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் 11.30 மணி அளவில் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன்காரணமாக கோவை- சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.