மாவட்ட செய்திகள்

பெண்கள் நன்றாக படித்து பல்வேறு துறைகளில் சாதனை படைக்க வேண்டும் + "||" + Girls read well Achieve record in various fields

பெண்கள் நன்றாக படித்து பல்வேறு துறைகளில் சாதனை படைக்க வேண்டும்

பெண்கள் நன்றாக படித்து பல்வேறு துறைகளில் சாதனை படைக்க வேண்டும்
பெண்களுக்கு கல்வி மிக முக்கியம். பெண்கள் நன்றாக படித்து பல்வேறு துறைகளில் சாதனை படைக்க வேண்டும். அரசியலுக்கு வர வேண்டும் என புதுவை தலைமை நீதிபதி தனபால் கூறினார்.
புதுச்சேரி,

புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான சோபனாதேவி தலைமை தாங்கினார். புதுவை சட்டத்துறை செயலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.


விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், தலைமை நீதிபதியுமான தனபால் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி துப்புரவு தொழிலாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார். விழாவில் நீதிபதி தனபால் பேசியதாவது.

உலக மகளிர் தினவிழா வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். மகளிர் தினம் என்றவுடன் அனைவருக்கும் அம்மா நினைவுக்கு வருவார். அடுத்தப்படியாக மனைவியை சொல்வார்கள்.

தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். ஆனால் பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை. பெண்களுக்கு எதிராக பல்வேறு கொடுமைகள் நடக்கிறது. பெண்களுக்கு கல்வி மிக முக்கியம். இன்றைய கல்வி முறை பெண்களுக்கு வலிமை தருவதாக இல்லை. ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆண் இருக்கிறான். ஒரு பெண்ணின் தோல்விக்கு பின்னால் ஒருபோதும் ஆண் இருக்கமாட்டான். ஒரு பெண்ணுக்கு எதிரி மற்றொரு பெண்ணாக தான் இருப்பார் என்று ஒரு பெண் எழுத்தாளர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் தங்களுக்கான உரிமைகளை தெரிந்து கொள்ளவேண்டும். குடும்ப வன்முறை சட்டம், குழந்தை பாலியல் வன்கொடுமை சட்டம், வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம், பணி புரியும் இடத்தில் பாலியல் தொல்லை சட்டம் உள்ளிட்டவைகளை தெரிந்துகொள்ள வேண்டும். இதுதொடர்பான விழிப்புணர்வுகளை சட்ட உதவி மையம் ஏற்படுத்தி வருகிறது. துப்புரவு தொழிலாளர்களுக்கு ஏதாவது குறைகள் இருந்தால் மனுவாக எழுதி சட்ட பணிகள் ஆணையத்தில் கொடுக்கலாம். பெண்கள் நன்றாக படித்து பல்வேறு துறைகளில் சாதனை படைக்க வேண்டும். அரசியலுக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க தலைவர் திருகண்ணச் செல்வன் மற்றும் சங்க நிர்வாகிகள் மற்றும் புதுவை நகராட்சி, தலைமை செயலகம், நீதிமன்ற வளாகம் ஆகியவற்றின் துப்புரவு பெண் ஊழியர்கள் 100 பேர் கலந்துகொண்டனர்.

விழாவில் புதுவையை சட்டசபை அருகே வேர்கடலை விற்பனை செய்து மூதாட்டிகள் இந்திராணி, அமிர்தம் என்கிற கருப்பாயி ஆகியோர் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான சோபனாதேவி கூறுகையில், ‘ உலக மகளிர் தினத்தில் இந்திராணி, அமிர்தம் ஆகியோரை கவிரவிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில் புதுவையில் நான் சட்டக்கல்லூரியில் பயிலும் காலம் முதல் தற்போது வரை இருவரும் கடலை விற்பனை செய்து வருகிறார்கள். வெயில், மழை என அனைத்து நாட்களிலும் தவறாமல் கடலை விற்பனை செய்து தள்ளாடும் வயதிலும் உழைத்து வருகிறார்கள். தற்போது நான் நீதிபதியாக உள்ளேன். ஆனால் நான் கல்லூரி காலத்தில் எப்படி அவர்களை பார்த்தேனோ, இன்றளவும் அப்படியே இருக்கிறார்கள். அவர்கள் பார்க்கும்போது எனக்குள் சோர்வு நீங்கி புத்துணர்வு பிறக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

புதுவை சட்டப்பணிகள் ஆணையத்தின் நடந்த உலக மகளிர் தினவிழாவில் 100 பெண் துப்புரவு தொழிலாளர்கள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற துப்புரவு தொழிலாளர்களை மேடைக்கு பேச அழைத்தனர். மேடை ஏறி பேசிய தொழிலாளர்கள் அனைவரும் தாங்கள் முதல் முறையாக மேடை ஏறி பேசுவதாகவும், தாங்களை அழைத்து கவுரவிப்பு செய்த அனைத்து அதிகாரிகளுக்கு மனம் குளிர நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியடைந்தனர்.

புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவரும், மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். நிர்வாக உறுப்பினர்கள் நிர்மலா வேலாயுதம், நளினிகேசவன், கீதா தனசேகரன், கவிதா சுகுமாறன், ஐஸ்வர்யா நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் சுகுமாறன் எம்.எல்.ஏ., செயலாளர் நாராயணசாமி கேசவன், கல்லூரி இயக்குனரும், முதல்வருமான வெங்கடாசலபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினர்களாக புதுவை மாநில எய்ட்ஸ் கட்டுபாட்டு இயக்குனர் ஜெயந்தி, மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி துணை பேராசிரியர் நித்யா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஞானபூங்கோதை நன்றி கூறினார்.

சிகரம் சர்வீஸ் சொசைட்டி சார்பில் ஒய்ஸ்மேன் பள்ளி மகளிர் தின விழா நடந்தது. விழாவில் டாக்டர் வித்யா ராம்குமார், ஹெலன் ராணி, கிருத்திகா, அனுராதா ராஜகோபாலன், நசீமா பானு ஆகியோருக்கு ‘சிகரம் தொட்ட மகளிர்’ என்ற விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிகரம் சர்வீஸ் சொசைட்டி நிறுவனர் சரோஜாபாபு, தலைவர் சந்திரமவுலி, அனந்தராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுவை சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாகி சம்பத் தலைமை தாங்கி பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். தலைமை ஆசிரியை சுசீலா சம்பத் முன்னிலை வகித்தார். இதில் ஆசிரியைகள் புஷ்பகுமாரி, அங்காளம்மா, அமுதா மற்றும் மாணவ-மாணவிகள் பெற்றோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் அய்யனார் மற்றும் அலுவலக பொறுப்பு ஆசிரியைகள் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியர் சண்முகம் நன்றி கூறினார்.

திருக்கனூர் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி மாணவ-மாணவிகளின் தாய்மார்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளியின் முதல்வர் சம்பத், துணை முதல்வர் சுசீலா சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.

புதுவை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதையடுத்து அவர், மாற்றுத்திறனாளியான உதவி கோட்டப்பொறியாளர் அனிதாவை கவுரவித்தார். இதில் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் ஜெயக்குமார் ஜெயவேலு, துணை பொதுமேலாளர்கள் உமாசங்கர், ராஜநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்ற மகளிர் வாடிக்கையாளருக்கு இலவசமாக சிம் கார்டு வழங்கப்பட்டது.