கோவில் வளாகத்தில் விவசாயிகள் பிரசாரம் செய்தது தவறு: அய்யாக்கண்ணுவை கைது செய்ய வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


கோவில் வளாகத்தில் விவசாயிகள் பிரசாரம் செய்தது தவறு: அய்யாக்கண்ணுவை கைது செய்ய வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 10 March 2018 2:45 AM IST (Updated: 9 March 2018 7:48 PM IST)
t-max-icont-min-icon

கோவில் வளாகத்தில் விவசாயிகள் பிரசாரம் செய்தது தவறு என்றும், அய்யாக்கண்ணுவை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

திருச்செந்தூர்,

கோவில் வளாகத்தில் விவசாயிகள் பிரசாரம் செய்தது தவறு என்றும், அய்யாக்கண்ணுவை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

நெல்லையம்மாளுக்கு ஆறுதல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நேற்று முன்தினம் துண்டுபிரசுரம் வினியோகம் செய்தனர். இதற்கு பா.ஜ.க. மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் அய்யாக்கண்ணு தாக்கப்பட்டார். விவசாயிகள் தாக்கியதில் காயம் அடைந்ததாக நெல்லையம்மாள் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மாலையில் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவர், அங்கு சிகிச்சை பெறும் நெல்லையம்மாளை சந்தித்து ஆறுதல் கூறி, அவரது உடல்நலனை பரிசோதனை செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கைது செய்ய வேண்டும்

அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளால் தாக்கப்பட்ட நெல்லையம்மாளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது. அவருக்கு காது கேட்க முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது. அய்யாக்கண்ணு கூறிய வார்த்தையானது, எந்த பெண்ணாலும் காது கொடுத்து கேட்க முடியாதது. அவ்வளவு மோசமான வார்த்தையை கூறி பிரச்சினையை ஏற்படுத்தியவர் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் அவர் மீது வழக்குப்பதிவு கூட செய்யப்படவில்லை. ஒரு பெண்ணின் மானம், சுயகவுரவத்துக்கு இழுக்கு ஏற்படும்போது, எதிர்வினையாற்றலாம் என்று சட்டம் கூறுகிறது.

கோவில் வளாகத்தில் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் பிரசாரம் செய்தது தவறு. கோவிலுக்கு வருகின்றவர்களை மனமாற்றம் செய்யும் வகையில் துண்டுபிரசுரம் வினியோகம் செய்தது தவறு. ஒரு பெண்ணை அவதூறாக பேசி தாக்கியது தவறு. தமிழகத்தில் பெண்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்து பெண்களை திரட்டி, பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவேன். அய்யாக்கண்ணுவை கைது செய்ய வேண்டும் என்று தெளிவாக கூறிக்கொள்கிறேன். இதில் முதல்–அமைச்சர் தலையிட வேண்டும்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

மீனாட்சி கல்லூரியில் அஸ்வினி என்ற பெண்ணை ஒருவன் கத்தியால் குத்தி சாகடித்து இருக்கிறான். அவன், அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி தாலி கட்டி இருக்கிறான். அவன் மீது அஸ்வினி குடும்பத்தோடு வந்து புகார் கொடுத்தவுடன் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டாமா? வாகன சோதனை என்ற பெயரில் காவல்துறையின் அத்துமீறலால் உஷா என்ற பெண் இறந்து உள்ளார். அவரது வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறி வந்தேன்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தவறையும் செய்து விட்டு, அதற்கு எதிர்வினையாற்றும் பெண்ணிடமே குறையும் காண்பீர்களா? மனதில் எவ்வளவு வக்கிரம் இருந்தால், அந்த வார்த்தை வெளிவந்து இருக்கும். நானாக இருந்தால் அவரை அடித்து இருப்பேன்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

முன்னதாக அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அவர்களுக்கு முருக பெருமான் நல்ல எண்ணங்களை வழங்க வேண்டியும், கோவில் வடக்கு நுழைவுவாயில் அருகில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் பாலாஜி, செயலாளர்கள் சிவமுருகன் ஆதித்தன், வீரமணி, துணை செயலாளர் நடராஜன், மகளிர் அணி தலைவி லதா, துணை தலைவர் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story