நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் செனட் கூட்டத்தில் துணைவேந்தர் வேண்டுகோள்


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் செனட் கூட்டத்தில் துணைவேந்தர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 10 March 2018 2:30 AM IST (Updated: 9 March 2018 7:51 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று செனட் கூட்டத்தில் துணைவேந்தர் பாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார்.

பேட்டை,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று செனட் கூட்டத்தில் துணைவேந்தர் பாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார்.

செனட் கூட்டம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 42–வது செனட் கூட்டம் நேற்று நடந்தது. துணைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கினார். பதிவாளர் சந்தோஷ்பாபு முன்னிலை வகித்தார்.

கூட்டம் தொடங்கியதும் துணைவேந்தர் பாஸ்கர் பேசினார். அப்போது அவர், நமது பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வுத்துறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் சூரிய மின்சார உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அனைத்து கல்லூரிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

தேர்வு முடிவுகள் தாமதம்

உறுப்பினர் டான்தர்மாராய்:– தேர்வு விடைத்தாள்களை திருத்த எத்தனை பேராசிரியர்கள் வந்துள்ளனர். தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துணைவேந்தர்:– நமது பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தேர்வு பணிகளுக்கு வருவது இல்லை. மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயல்களுக்கு ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். தேர்வு கண்காணிப்பாளர் பணிக்கு பெரும்பாலான ஆசிரியர்கள் வருவது இல்லை. விடைத்தாள்களை திருத்தவும் பெரும்பாலான ஆசிரியர்கள் வருவது இல்லை. இதனால் தேர்வு முடிவுகள் வெளியிட தாமதம் ஆகிறது. மாணவர்களின் உயர்கல்வியும் பாதிக்கப்படுகிறது. பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட ஆசிரியர்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் சம்பளம்

உறுப்பினர் சுப்பாராஜ்:– சுயநிதி மற்றும் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு தற்போதைய தகுதியின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கடந்த 2009–ம் ஆண்டு முதல் ஏராளமான ஆசிரியர்கள் அப்போதைய நிலையில் தகுதியானவர்களாக கருதப்பட்டனர். அவர்களுக்கு தற்போது நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும். அவர்களுக்கான சம்பளத்தை எந்த காரணத்தை கொண்டும் குறைக்கக்கூடாது.

துணைவேந்தர்:– யு.ஜி.சி. வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஒப்பந்தத்தின்படியே நியமிக்கப்படுகின்றனர். அதனால் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் குறிப்பிட்ட தகுதியை பெற்று இருப்பது அவசியம்.

இவ்வாறு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துணைவேந்தர் பதில் அளித்தார்.

கூட்டத்தில் பாடதிட்ட மாற்றம், தேர்வுத்துறை, பி.எச்.டி. படிப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு துணைவேந்தர் பாஸ்கர் பதில் அளித்தார். கூட்டத்தில் சிண்டிகேட் உறுப்பினர்கள் கிளிட்டஸ்பாபு, மாதவ சோமசுந்தரம், செனட் உறுப்பினர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உறுப்பினர் பேச்சால் திடீர் பரபரப்பு

செனட் கூட்டத்தில் உறுப்பினர் மனோகர ஜஸ்டஸ் பேசுகையில், தான் கேட்ட சில கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறிவிட்டு சில கேள்விகளை எழுப்பினார். அதாவது, பல்கலைக்கழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் விதிமுறைப்படி நியமிக்கப்பட்டுள்ளார்களா? துணைவேந்தர் விமான பயணத்தின் செலவு விவரம் போன்ற தகவல்கள் தரவில்லை. பல்கலைக்கழகத்தில் ஊழல் நடந்துள்ளது என்று பரபரப்பு புகார் கூறினார்.

அதற்கு பதில் அளித்து துணைவேந்தர் பேசுகையில், உறுப்பினர் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் வெளிப்படையாக பதில் அளிக்க சிண்டிகேட் அனுமதி அளிக்காது. சிண்டிகேட் விதிமுறைகளுக்கு உட்பட்டே கேள்விகளுக்கு பதில் வழங்கப்படும். யு.ஜி.சி. விதிமுறைப்படியே ஆசிரியர்கள் நியமனம் நடந்துள்ளது. கருத்தரங்கு, மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் துணைவேந்தர் கலந்து கொள்ள விமான செலவுக்கு ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நான், ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் மட்டுமே செலவு செய்துள்ளேன் என்றார்.

இந்த பதிலில் திருப்தி அடையாத மனோகர ஜஸ்டஸ் தொடர்ந்து பேச முயன்றார். அவர் பேச துணைவேந்தர் மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த உறுப்பினர் அவதூறாக ஒரு வார்த்தையை பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை வெளியேற்ற வேண்டும் என்றும், அவதூறு வார்த்தை பேசியவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் துணைவேந்தர் கூறினார். உடனே உறுப்பினர் அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story