தமிழக அரசியல் வெற்றிடத்தை பா.ஜனதா நிரப்பும்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


தமிழக அரசியல் வெற்றிடத்தை பா.ஜனதா நிரப்பும்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 10 March 2018 4:30 AM IST (Updated: 9 March 2018 11:25 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடத்தை பா.ஜனதா கட்சி நிரப்பும் என்று மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட பா.ஜனதா கட்சியின் மகாசக்தி, சக்திகேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று திண்டுக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் தமிழ் தாமரை யாத்திரை நடத்தி வருகிறோம். இந்த சுற்றுப்பயணத்தின்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்கள் பிரச்சினைகளை அறிக்கையாக தயாரித்து தமிழக அரசிடம் வழங்க உள்ளோம். 5 வாக்குச்சாவடிகளுக்கு தலா ஒரு பா.ஜனதா பொறுப்பாளரை நியமித்துள்ளோம். எந்த தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம்.

திருச்சியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தாக்கியதில் பெண் பலியானது அதிர்ச்சி அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வந்தேன். 4 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று தாக்கியதாக அவர்கள் தெரிவித்தனர். போலீசாரை காப்பாற்றும் வகையிலே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவிலில் பா.ஜனதா பெண் நிர்வாகியை அய்யாக்கண்ணு தாக்கியதாக தெரிகிறது. இதேபோல, சென்னையில் ஐ.டி.பெண் ஊழியர் தாக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி இல்லை.

டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. குக்கர் என்றாலே ஊழலின் சின்னம் தான். ஓட்டுக்கு ரூ.20 ஆயிரம் வரை தருவதாக டோக்கன் வழங்கினர். ஆனால் அந்த டோக்கனுக்கு இதுவரை பணம் தரவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. அரிவாளால் கேக் வெட்டும் நிலையில் உள்ளது.

4 ஆண்டுகளுக்கு பிறகு கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடத்தப்பட்டது வரவேற்கத்தக்கது. போலீஸ்துறை, ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். போலீசாருக்கு பணிநேரம் ஒதுக்க வேண்டும். பா.ஜனதா ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு 33 சதவீதத்துக்கும் அதிகமாக இடஒதுக்கீடு வழங்கப்படும். கத்தி, கத்தி படிக்க வேண்டிய மாணவர்கள் கத்தியுடன் திரிகிறார்கள்.

மாணவர்களுக்கு பண்பாட்டு வகுப்புகள் நடத்த வேண்டும். மேலும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகளிலும் மனநல மையங்கள் அமைக்க வேண்டும். தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவர் பார்வையிலும் ஒரு வெற்றிடம் தெரிகிறது. இந்தியாவில் 22 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தையும் பா.ஜனதா நிரப்பும். மக்கள் எங்களுக்கு வாய்ப்பு தருவார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமைக்கப்படும். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் அ.தி.மு.க. அரசின் அடுத்த நிலை தெரியவரும். பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக பா.ஜனதா தொண்டர் ஒருவர் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார். இதேபோல, பூனூல் அறுப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, முகநூலில் பெரியார் குறித்து கருத்து தெரிவித்த எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அந்த பதிவை நான் பதிவிடவில்லை. தனது அட்மின் தான் பதிவிட்டதாக எச்.ராஜா தெரிவித்துள்ளதோடு, மன்னிப்பும் கேட்டுள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை, என்றார்.

அப்போது, முகநூல் தனிநபரின் பயன்பாட்டில்தான் இருக்கும். அட்மின் என்ற ஒருவரே கிடையாது என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துவிட்டு, அந்த பதிவை நான் பதிவிடவில்லை. தனது அட்மின் பதிவிட்டதாக மு.க.ஸ்டாலின் கூறினாரே. அதேபோலதான் இந்த விவகாரத்திலும் நடந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story