ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கிய 2 மாணவர்களின் உடல் கரை ஒதுங்கியது


ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கிய 2 மாணவர்களின் உடல் கரை ஒதுங்கியது
x
தினத்தந்தி 10 March 2018 3:45 AM IST (Updated: 10 March 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

சின்ன வீராம்பட்டினத்தில் கடலில் குளித்தபோது ராட்சத அலையால் இழுத்துச்செல்லப்பட்ட 2 மாணவர்கள் கடலில் மூழ்கி பலியான நிலையில் அவர்களின் உடல் வீராம்பட்டினம் கடற்கரையில் ஒதுங்கியது.

அரியாங்குப்பம்,

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் சுபம்குமார் (வயது 21), புஷன்சின்கா (21), அமித் ஆனந்த் (21) உள்பட 5 மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவைக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் புதுச்சேரி தங்கி பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர்.

நேற்று முன்தினம் மாலையில் அவர்கள் சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு சென்றனர். அங்கு அவர்கள் 5 பேரும் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர்.

அவர்களில் சுபம்குமாரும், புஷன்சின்காவும் கடலில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை நண்பர்கள் 2 பேரையும் வாரிச்சுருட்டி கடலுக்குள் இழுத்துச் சென்றது. அதனைப் பார்த்ததும் கடலில் குளித்துக்கொண்டிருந்த மற்ற நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து உதவி கேட்டு அலறினார்கள்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டதும், அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் விரைந்து வந்து கடலில் இறங்கி அலையால் இழுத்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களையும் தேடி மீட்க முயன்றனர். ஆனால் அந்த மாணவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலோர காவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசந்தர், சப்-இன்ஸ்பெக்டர் கொண்டா பாலாஜிராவ் ஆகியோர் தலைமையில் கடலோர காவல் போலீசாரும் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் பலன் கிடைக்கவில்லை. இதற்கிடையே இரவுநேரமாகி இருள் சூழ்ந்ததால் தேடும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில் ராட்சத அலையால் இழுத்துச்செல்லப்பட்ட மாணவர்கள் சுபம்குமார், புஷன் சின்கா ஆகியோர் கடலில் மூழ்கி இறந்த நிலையில் அவர்களின் உடல்கள் நேற்று அதிகாலை சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கியது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதுபற்றி அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், மாணவர்கள் பலியான தகவல் குறித்து அவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்களின் பெற்றோர் புதுச்சேரிக்கு விரைந்து வந்து தங்கள் மகன்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் மாணவர்களின் உடல்கள் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story