பெண்ணை கற்பழித்து திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 8 ஆண்டு ஜெயில்


பெண்ணை கற்பழித்து திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 8 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 10 March 2018 4:00 AM IST (Updated: 10 March 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை கற்பழித்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்த வாலிபருக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ராமநாதபுரம் மகிளா கோர்ட்டு உத்தரவிட்டது.

ராமநாதபுரம்,

மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வரும் 24 வயது பெண்ணும் அதே முகாமில் வசித்து வரும் குணபாலசிங்கம் மகன் பிரசாத்(24) என்பவரும் உறவினர்கள். இதனால் 2 பேரும் நெருக்கமாக பழகினார்களாம். இந்த நிலையில் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வாலிபர் பிரசாத் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் கர்ப்பமானார். இதையடுத்து பிரசாத்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு பிரசாத் மறுத்து விட்டதுடன் கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து 5 மாத கர்ப்பிணியான அவர், கடந்த 29.2.2012-ந்தேதி ராமேசுவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேசுவரி வழக்கு பதிந்து பிரசாத்தை கைது செய்தார். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதனை தொடர்ந்து மரபணு சோதனை நடத்தப்பட்டதில் அது பிரசாத்தின் குழந்தைதான் என்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி கயல்விழி, பெண்ணை கற்பழித்த குற்றத்துக்காக வாலிபர் பிரசாத்துக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.26,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதற்கு ஓராண்டு ஜெயில் தண்டனையும் ரூ.5,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த அபராத தொகையில் ரூ.30,000-த்தை பாதிக்கப்பட்ட பெண்ணிடமும், ரூ.1000 வழக்கு செலவுக்கும் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயக்கொடி ஆஜரானார். 

Next Story