பொம்மை துப்பாக்கியை காட்டி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்


பொம்மை துப்பாக்கியை காட்டி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்
x
தினத்தந்தி 10 March 2018 4:00 AM IST (Updated: 10 March 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே பொம்மை துப்பாக்கியை காட்டி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

துடியலூர்,

கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஜி.என்.மில்ஸ் திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் ஹர்பிர்த் சிங் (வயது 60), ரியல் எஸ்டேட் அதிபர். துடியலூர் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.

பின்னர் அவர், திருவள்ளுவர் வீதியில் ஒரு பங்களா ஒன்றை வாங்கினார். அதை புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. பணி முடிந்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் அங்கு அவர் தனது குடும்பத்து டன் குடியேறினார்.

போலீஸ் என்று கூறினார்.

கடந்த 3-ந் தேதி காலையில் ஹர்பிர்த் சிங் வீட்டிற்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தன்னை போலீஸ் என்று அறிமுகப்படுத்தி, உங்களுக்கு தொழிலில் போட்டியும், பொறாமையும் இருப்பதால் உங்கள் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் என்பதால் எனக்கு துப்பாக்கியை கொடுத்து, பாதுகாப்பு பணிக்காக நியமித்து இருக்கிறார்கள் என்று கூறினார்.

உடனே அவர் அந்த நபரிடம், நான் யாரிடமும் பாதுகாப்பு கேட்கவில்லை என்பதால், போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்ட பிறகு, உங்களுக்கு கூறுகிறேன், நீங்கள் செல்லலாம் என்று கூறினார். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த நிலையில், நேற்று காலை 10 மணிக்கு ஹர்பிர்த் சிங் தனது காரில் கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். காரை அவரே ஓட்டிச் சென்றார். ஜி.என்.மில்ஸ் அருகே அவர் வந்தபோது, போலீஸ் என்று கூறிய அந்த நபர் காரை தடுத்து நிறுத்தினார். அந்த நபருடன் 2 பேர் இருந்தனர்.

அவர் காரை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தியதும், உங்கள் பாதுகாப்புக்காக எங்களை போலீஸ் அதிகாரிகள் அனுப்பி உள்ளனர் என்று கூறினார். இதையடுத்து அவர் காரில் ஏற சொன்னதும், அந்த நபர் காரின் முன் இருக்கையிலும், மற்ற அந்த நபரும், பின் இருக்கையில் 2 பேரும் ஏறிக்கொண்டனர்.

கார் சிறிது தூரம் சென்றதும், அந்த நபர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து, ரூ.10 லட்சம் கொடு என்று கூறி ஹர்பிர்த் சிங்கை மிரட்டினார். உடனே அவர் என்னிடம் பணம் இல்லை என்று கூறினார். அதற்கு அந்த நபர், நீ ரியல் எஸ்டேட்டில் பல லட்சம் ரூபாய் சம்பாதித்து உள்ளாய், பணம் இல்லை என்று எங்களிடம் ஏமாற்றுகிறாயா? பணம் கொடுக்கவில்லை என்றால் சுட்டுக்கொன்று விடுவோம் என்று மிரட்டி உள்ளார்.

உடனே அவர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று சத்தமிட்டபடி, காரை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தினார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் காருக்குள் இருந்த அவர்கள் 3 பேரும் அந்த துப்பாக்கியை காருக்குள்ளேயே போட்டுவிட்டு தப்பி ஓடினார்கள்.

இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஹர்பிர்த் சிங் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

அத்துடன் அந்த நபர்கள் காருக்குள் விட்டுச்சென்ற அந்த துப்பாக்கியை எடுத்து பரிசோதித்தனர். அப்போது அது பொம்மை துப்பாக்கி என்பதும், சிறுவர்கள் விளையாடுவதற்கு பயன்படுத்துவதும், அந்த மர்ம ஆசாமிகள் போலீஸ் என்றுக்கூறி அவரிடம் பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கிறதா என்று பார்த்தபோது, அங்கிருந்த சில கடைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. உடனே போலீசார் அந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து அந்த நபர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் போலீஸ் என்றுக்கூறி பணம் பறிக்க முயன்ற அந்த 3 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படையை சேர்ந்த போலீசார் தலைமறைவான அந்த நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பொதுமக்கள் அதிகமாக நடமாடும் கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story