போலீஸ் அதிகாரி எட்டி உதைத்ததில் பலியான கர்ப்பிணி உஷா உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி


போலீஸ் அதிகாரி எட்டி உதைத்ததில் பலியான கர்ப்பிணி உஷா உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி
x
தினத்தந்தி 10 March 2018 5:00 AM IST (Updated: 10 March 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மேலப்புதூரில் உள்ள கல்லறையில் உஷாவின் உடல் அடக்கம் நடந்தது.

திருச்சி, -

போலீஸ் அதிகாரி எட்டி உதைத்ததில் பலியான கர்ப்பிணி உஷா உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். திருச்சி மேலப்புதூரில் உள்ள கல்லறையில் உடல் அடக்கம் நடந்தது.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 34). தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி உஷா (30). சம்பவத்தன்று தஞ்சையில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சியில் உள்ள அவர்களது உறவினர் ஒருவரின் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு வந்து கொண்டிருந்தனர். துவாக்குடி சுங்கச்சாவடி அருகே ஹெல்மெட் சோதனையின் போது, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் எட்டி உதைத்ததில் ராஜா மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டு உஷா பலியானார்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் உஷாவின் உடல் திருச்சி கே.கே.நகர் ரெங்கா நகரில் உள்ள அவரது அண்ணன் வீட்டிற்கு நேற்று முன்தினம் மாலை கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு உறவினர்கள், அந்த பகுதி பொதுமக்கள் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எம்.எல்.ஏ., அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் உஷாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் காலை 10 மணிக்கு உஷா உடல் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து ஊர்வலமாக இந்தியன் வங்கி காலனியில் உள்ள புனித ஜெகன் மாதா ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு பிரார்த்தனை நடந்த பிறகு காலை 11.30 மணி அளவில் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, டி.வி.எஸ்.டோல்கேட், தலைமை தபால் நிலைய ரவுண்டானா வழியாக மேலப்புதூரில் உள்ள புனித உத்திரகிரியை மாதா கோவில் கல்லறைக்கு கொண்டு செல்லப் பட்டது. மதியம் 1.10 மணி அளவில் உஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் உறவினர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர். உஷாவின் இறுதி ஊர்வலத்தையொட்டி மன்னார்புரம் ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story