அய்யாக்கண்ணு தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்: தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் அறிவிப்பு


அய்யாக்கண்ணு தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்: தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 March 2018 3:45 AM IST (Updated: 10 March 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தாராபுரம்,

விவசாயிகள் வங்கியில் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 1-ந்தேதி அன்று கன்னியாகுமரியிலிருந்து கோரிக்கை பயணம் புறப்பட்டார்கள்.

இந்த கோரிக்கை பயணமானது 100-வது நாளில் சென்னையை சென்றடைந்து அங்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, மனு கொடுப்பதாக திட்டமிடபட்டிருந்தது. கோரிக்கை பயணத்தின் போது வழியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், பயணக்குழுவினர் விவசாயிகளின் நிலைமையைப்பற்றி பிரசாரம் செய்து வந்தார்கள்.

இந்த பிரசாரத்தின் போது மத்திய, மாநில அரசுகளைப்பற்றி விமர்சனம் செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு நேர்ந்து வரும் கொடுமைகளைப்பற்றியும், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை வஞ்சித்து வருவதைப்பற்றியும் விளக்கிக்கூறப்பட்டது. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதை தாங்கிக்கொள்ள முடியாத பா.ஜ.க.வினர், திருச்செந்தூரில் அய்யாக்கண்ணு குழுவினர் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கிக்கொண்டிருந்தபோது, தங்களுடைய மகளிர் அணி நிர்வாகி ஒருவரை தூண்டிவிட்டு கலவரம் செய்ய திட்டமிட்டார்கள்.

அதன்படி அந்த பெண் கூட்டத்திற்குள் புகுந்து அய்யாகண்ணு ஒரு தலைவர் என்றும் பாராமல் பொதுமக்கள் மத்தியில் அவரை தாக்கியுள்ளார். முதியவர் என்று கூட பார்க்காமல் அய்யாக்கண்ணுவை கீழ்தரமான வார்த்தைகளால் திட்டியது தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டது. அய்யாக்கண்ணு தனி மனிதர் அல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்காகவும், ஜனநாயக முறையில் நீதி கேட்டு போராடும் ஒரு விவசாய போராளி. அவரைச்சுற்றி பல விவசாய சங்கங்களும், பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும் உள்ளனர்.

அய்யாக்கண்ணுவின் செயல்பாடு நியாயமற்றது என்றால், அவர் மீது புகார் அளித்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பார்கள். அதை விட்டுவிட்டு பெண்களை ஏவி விட்டு அய்யாக்கண்ணுவை தாக்குவது என்பது மிகப் பெரிய கோழைத்தனம்.

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத மத்திய-மாநில அரசுகள், அய்யாக்கண்ணுவை தாக்குவதன் மூலம் போராட்டக்களத்தில் உள்ள விவசாயிகளை பயமுறுத்த நினைக்கிறது. இதற்கெல்லாம் விவசாயிகள் பயப்பட மாட்டார்கள்.

தமிழகத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக பலர் உயிர் தியாகம் செய்த வரலாறு உண்டு. பா.ஜ.க.வின் இந்த அராஜகப்போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக அய்யாக்கண்ணுவிற்கும், அவருடன் கோரிக்கை பயணத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

பெரியார் சிலை உடைக்கப்பட்டதையும், விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தாக்கப்பட்டதையும் கண்டித்து, வருகின்ற 26-ந்தேதி தமிழகம் முழுவதும் தாலுகா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story