மேலூர் அருகே பிளஸ்–2 தேர்வு எழுத வந்த மாணவருக்கு கத்திக்குத்து


மேலூர் அருகே பிளஸ்–2 தேர்வு எழுத வந்த மாணவருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 10 March 2018 3:15 AM IST (Updated: 10 March 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே, பிளஸ்–2 தேர்வு எழுத வந்த மாணவரை, சக மாணவர்கள் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

மேலூர்,

மதுரை மாவட்டம் திருவாதவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர்.

திருவாதவூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மாயக்காளையின் மகன் அர்ஜுன் (வயது 17) இந்தப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று பள்ளிக்கு அர்ஜுன் பிளஸ்–2 தேர்வு எழுத வந்தார். அப்போது அவரிடம் சக மாணவர்கள் இருவர் தகராறு செய்தனர். அவர்களுக்குள் தகராறு முற்றியதில் அர்ஜுனனை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு இருவரும் தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயமடைந்த மாணவர் அர்ஜுன் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

வகுப்பறையில் பெஞ்சில் உட்காருவதில் ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திருவாதவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளியில் நடந்த இந்த சம்பவத்தால் மற்ற மாணவ–மாணவிகளின் பெற்றோர்கள் அங்கு பெருமளவு திரண்டனர். அவர்கள் கூறியதாவது:– பள்ளியின் சுற்றுச்சுவர் சில இடங்களில் சமூக விரோதிகளால் இடித்து பாதை உருவாக்கப்பட்டுள்ளது. அதில் வெளி ஆட்கள் பள்ளியினுள் வருவதும், அதன் வழியாக மாணவர்கள் வெளியே சென்றும் வருகின்றனர். இந்த செயலால் மாணவர்களிடம் தவறான பழக்கங்கள் ஏற்பட்டு இதுபோன்ற சம்பவம் நடக்கிறது. இதுபோன்ற சம்பவத்தால் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார். பள்ளியில் வகுப்பு முடிந்து மாணவ–மாணவிகள் செல்லும் வரை ஒரு சப்–இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் இருக்கவும், தப்பி ஓடிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும் அவர் உத்தரவிட்டார்.

Next Story