300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்-போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் சிறப்பு பேட்டி


300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்-போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் சிறப்பு பேட்டி
x
தினத்தந்தி 10 March 2018 5:00 AM IST (Updated: 10 March 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் சாலை விபத்துகளை 57 சதவீதம் குறைத்துள்ளோம். இந்த ஆண்டு மேலும் 300 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படுகிறது என்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறினார்.

சென்னையில் முதல்-அமைச்சர் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரும் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தஞ்சை திரும்பிய அவர் ‘தினத்தந்தி’ நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தஞ்சை மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

பதில்:- விபத்துகள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது. ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். லோடு ஆட்டோ, மினி லாரி போன்ற வாகனங்களில் பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத்துகள் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் விபத்து தொடர்பாக 100 மரணங்கள் ஏற்பட்டன. ஆனால் தற்போது வரை 43 மரணங்கள் நடந்துள்ளன. இது கடந்த ஆண்டை விட 57 சதவீதம் குறைவு. இதையும் குறைக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

தேசிய நெடுஞ்சாலை, மற்றும் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில் போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரை அந்த பகுதியில் நிறுத்தி வேகமாக செல்லும் வாகனங்களை மெதுவாக செல்ல அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளின் உரிமையாளர்கள், தலைமை ஆசிரியர்களை அழைத்து ஆசிரியர்கள் இருசக்கர வாகனங்களில் வரும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.

கேள்வி:- போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்க தனியார் பங்களிப்புடன் எத்தனை இடங்களில் கேமரா பொருத்தப்பட உள்ளது?

பதில்:- தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் அரசு சார்பில் 350 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பட்டுக்கோட்டை திருவையாறு, பாபநாசம் ஆகிய இடங்களில் மேலும் 300 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. தனியார் சார்பில் 3,200 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்னும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. புதிதாக பெட்ரோல் நிலையங்கள் அமைக்க விண்ணப்பித்துள்ளவர்களிடம் கூட கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிட்டுள்ளோம். கல்லணை பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உள்ளோம்.

கேள்வி:- வழிப்பறி, கொள்ளை, கொலை சம்பவங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

பதில்:- தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 43 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 1,226 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தற்போது வரை 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 15 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். முக்கிய பண்டிகையையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக ரவுடிகள், கொள்ளையர்களை கைது செய்துள்ளோம். ரவுடிகளை கண்காணிக்க 5 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கேள்வி:- பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

பதில்:- பள்ளி, கல்லூரி மற்றும் பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

கேள்வி:- கந்து வட்டியை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

பதில்:- தஞ்சை மாவட்டத்தில் கந்து வட்டி புகார் தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கந்துவட்டி தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்காவிட்டால் என்னிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். அல்லது எனது செல்போன் எண்ணுக்கு 94981-10044 குறுஞ்செய்தி அனுப்பலாம். சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story