ரசாயன ஆலைகள் தீயில் எரிந்து நாசம் 3 தொழிலாளர்கள் உடல் கருகி சாவு 13 பேர் படுகாயம்


ரசாயன ஆலைகள் தீயில் எரிந்து நாசம் 3 தொழிலாளர்கள் உடல் கருகி சாவு 13 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 10 March 2018 3:30 AM IST (Updated: 10 March 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

பொய்சர் எம்.ஐ.டி.சி. பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிர் இழந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 5 ரசாயன ஆலைகள் தீயில் எரிந்து நாசமாகின.

மும்பை,

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் பொய்சர்- தாராப்பூர் தொழிற்பேட்டை பகுதியில்(எம்.ஐ.டி.சி.) ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசாயன ஆலைகள் உள்ளன. இங்குள்ள ராம்தேவ் ரசாயன ஆலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஆலையில் இருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இந்தநிலையில் ஆலையில் இருந்த 25 ரசாயன பேரல்கள் வெடித்து சிதறின. இதனால் அந்த இடமே குலுங்கியது.

மேலும் ஆலையை சுற்றி சுமார் 12 கி.மீ. தொலைவிற்கு அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டது என நினைத்து தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். இதற்கிடையே ரசாயன பேரல்கள் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட அதிர்வால் பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.

இந்தநிலையில் ஆலையில் பிடித்த தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. மேலும் தீ அருகில் உள்ள ஆர்த்தி, பிராச்சி இண்டஸ்டிரிஸ், பாரத், யுனிமேகஸ் ஆகிய 4 ரசாயன ஆலைகளுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதியே நெருப்பு மண்டலமானது.

முன்எச்சரிக்கை நடவடிக்கையாக எம்.ஐ.டி.சி. பகுதியை சுற்றியிருந்த சாலைகள் மூடப்பட்டன. அந்த வழியாக செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. எம்.ஐ.டி.சி. பகுதியில் உள்ள சுமார் 57 ஆலைகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தீணைப்பு வீரர்கள் 25 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியிலும், மீட்பு பணியிலும் ஈடுபட்டனர்.

அப்போது ஆர்த்தி என்ற விட்டமின் மருந்து பொருள் தயாரிக்கும் ஆலைக்குள் 3 பேர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர்கள் பெயர் பின்டு குமார், ஜானு, அலோக்நாத் என்பது தெரியவந்தது.

முதலில் தீ விபத்து ஏற்பட்ட ஆலைகளில் சிக்கியிருந்த சுமார் 13 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீப்பிடித்து எரிந்த ஆலைகளை தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் பணி தொடர்ந்து நடந்தது.

இந்தநிலையில் தீ விபத்து குறித்து எம்.ஐ.டி.சி. பகுதி அருகே வசித்து வரும் குடியிருப்புவாசி ஒருவர் கூறுகையில், ‘ரசாயன பேரல்கள் வெடிகுண்டு போல பயங்கர சத்தத்துடன் வெடித்தது. சுமார் 40 முறை வெடிகுண்டு வெடித்தது போல பயங்கர சத்தம் எங்களுக்கு கேட்டது’ என்றார்.

இந்தநிலையில் விபத்து நடந்த இடத்திற்கு பால்கர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் நர்னவாரே வந்து பார்வையிட்டார். அவர் மீட்பு பணிகளை விரைந்து முடிக்க தீயணைப்பு துறை, போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். இந்த விபத்து குறித்து பால்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story