அரசு உயர் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் இன்று ஆலோசனை


அரசு உயர் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 10 March 2018 5:00 AM IST (Updated: 10 March 2018 4:44 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் அரசு உயர் அதிகாரிகளுடன் இன்று(சனிக்கிழமை) பெங்களூருவில் ஆலோசனை நடத்துகிறார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி கர்நாடகத்திற்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையமும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதேப் போல் தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) ஆகியவை வியூகங்களை வகுத்து தற்போதே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன.

இதற்கிடையே அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-வது வாரத்தில் கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் தேர்தல், அரசியல் சீர்திருத்த தேசிய மாநாடு பெங்களூரு இந்திய மேலாண்மை நிறுவனத்தில் இன்று (சனிக் கிழமை) தொடங்கு கிறது.

இதில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் கலந்து கொண்டு, மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இதில் குஜராத், இமாசலபிரதேச தேர்தல் கண்காணிப்பு அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. மேலும் கர்நாடக வாக்காளர் ஆய்வு அறிக்கையும் வெளியிடப்பட உள்ளது.

தேர்தலில் பணம் மற்றும் அதிகார பலம் ஏற்படுத்தும் தாக்கம், தேர்தல் சீர்திருத்தம், அரசியல் சீர்திருத்தம் ஆகிய தலைப்புகளில் தனித்தனியாக கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. இதில் நாடு முழுவதும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாடு நாளையும்(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்த மாநாட்டை தொடர்ந்து தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத், கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாட்டு பணிகள் குறித்து தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் தேதியை இறுதி செய்வது, இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பு, வாக்குச்சாவடிகள் அமைப்பது, வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்துகிறார்.

Next Story