இறந்த ராணுவ வீரரின் குடும்பத்தை ஏமாற்ற முயற்சி: மோசடி ஆசாமிக்கு பொதுமக்கள் தர்ம அடி


இறந்த ராணுவ வீரரின் குடும்பத்தை ஏமாற்ற முயற்சி: மோசடி ஆசாமிக்கு பொதுமக்கள் தர்ம அடி
x
தினத்தந்தி 10 March 2018 3:45 AM IST (Updated: 10 March 2018 6:44 AM IST)
t-max-icont-min-icon

இறந்த ராணுவ வீரரின் குடும்பத்தை ஏமாற்ற முயற்சி செய்த மோசடி ஆசாமிக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். அவரை கைது செய்ய போலீஸ் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பண்ணந்தூர் அருகே உள்ள கொட்டவூரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் அஜீத்குமார் (வயது 23). ராணுவ வீரர். கடந்த ஜனவரி மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவர் மோட்டார்சைக்கிளில் காவேரிப்பட்டணம் அருகே பையூர் பக்கமாக சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த வாகனம் மோதி இறந்தார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜீத்குமாரின் குடும்பத்தை தொடர்பு கொண்ட ஒருவர், உங்கள் மகன் இறந்ததின் காரணமாக ரூ.5 லட்சம் காசோலை வந்துள்ளதாகவும், அதற்கு ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பாக அஜீத்குமாரின் உறவினர்கள் விசாரித்த போது அந்த நபர் மோசடி ஆசாமி என தெரிய வந்தது.

இதையடுத்து அவரிடம் நைசாக பேசி நேற்று கிராமத்திற்கு இளைஞர்கள் வரவழைத்தனர். பின்னர் கொட்டாவூரில் அந்த நபரை பிடித்து கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். மேலும் இது குறித்து பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரமாக போலீசார் வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பண்ணந்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பாரூர் இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் அவரது பெயர் முனிராஜ் (வயது 36) என்றும், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

மேலும் இதே போல பல ராணுவ வீரர்களின் குடும்பத்தினரிடம் அவர் பண மோசடி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து முனிராஜை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story