சிறுபான்மையினர் தொழில் தொடங்க தமிழக அரசு கடன் உதவி ஆணைய தலைவர் பேச்சு


சிறுபான்மையினர் தொழில் தொடங்க தமிழக அரசு கடன் உதவி ஆணைய தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 10 March 2018 3:45 AM IST (Updated: 10 March 2018 7:20 AM IST)
t-max-icont-min-icon

சிறுபான்மையினர் தொழில் தொடங்க தமிழக அரசு கடன் உதவி வழங்குகிறது என்று மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் டாக்டர் எம்.பிரகாஷ் கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் டாக்டர் எம்.பிரகாஷ் தலைமையில், கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் டாக்டர் எம்.பிரகாஷ் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்று வருவதற்கு ஆண்டிற்கு 500 நபர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கி வருகிறது. மேலும் 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்க்கவும் மற்றும் புனரமைக்கும் பணிகளுக்கு மானியத்துடன் நிதி உதவி வழங்கி வருகிறது.

அதேபோல் இஸ்லாமியர்களுக்கான முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் இணை மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அதனை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் மூலம் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் சமுதாயத்தை சேர்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள சிறுபான்மையினர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் அடைய பல்வேறு கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனி நபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுகடன் திட்டம், கல்விக்கடன் ஆகிய கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் கறவை மாடு, ஆட்டோ ஆகிய சுயதொழில் தொடங்கவும் கடனுதவி வழங்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை சிறுபான்மையினருக்காக செயல்படுத்தி வருகிறது.

இதையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட சிறுபான்மையினர்கள் கல்விக் கடன், வேலைவாய்ப்பு, தேவாலயங்கள் பழுதுபார்த்தல், மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.

கூட்டத்தில் 8 சிறுபான்மையினர்களுக்கு ரூ.27 ஆயிரம் மதிப்பிலான இலவச தையல் எந்திரங்களும், உலமாக்கள் நல வாரிய உறுப்பினர்கள் 2 பேருக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவியாக ரூ.32 ஆயிரமும், 14 பேருக்கு உலமா உறுப்பினர் அட்டைகளும் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் யு.சுதீர்லோதா, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பானு, அரசு அலுவலர்கள், பள்ளிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story