அசத்தும் ஆட்டோக்காரர் மகள்!


அசத்தும் ஆட்டோக்காரர் மகள்!
x
தினத்தந்தி 10 March 2018 1:00 PM IST (Updated: 10 March 2018 1:00 PM IST)
t-max-icont-min-icon

சென்னை தடகள வீராங்கனை தபிதா, பல சாதனைகளைத் தகர்த்து வருகிறார்.

செயின்ட் ஜோசப் விளையாட்டு அகாடமியால் செதுக்கப்பட்டிருக்கும் தபிதாவை சந்தித்தோம்...

உங்களைப் பற்றி ஓர் அறிமுகம்...

நான் சென்னை விருகம்பாக்கத்தில் வசிக்கிறேன். அங்குள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறேன். அப்பா திலீப் மகேஷ்வரன் ஆட்டோ ஓட்டுநர், அம்மா மேரி கோகிலா இல்லத்தரசி. எனக்கு ரூபா ரேச்சல், ஜெபசெல்வி என்று இரு அக்காக்கள், தம்பி சாம்வேல்.

நீங்கள் தடகளத்தில் எந்தெந்தப் பிரிவுகளில் பங்கேற்று வருகிறீர்கள்?

நான், நீளந்தாண்டுதல், மும்முறை தாண்டுதல், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் ஆகியவற்றில் பங்கேற்று வருகிறேன்.

நீங்கள் தடகளத்துக்கு வந்தது எப்படி?

நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, எங்கள் பள்ளி விளையாட்டு விழாவைப் பார்த்த எனது பெற்றோர், என்னையும் விளையாட்டில் ஈடுபடுத்தத் தீர்மானித்தனர். அப்போது ஓர் அக்காவின் மூலம் செயின்ட் ஜோசப் ஸ்போர்ட்ஸ் அகாடமி பற்றிக் கேள்விப்பட்டு இங்கு சேர்த்துவிட்டனர்.

நீங்கள் முதன்முதலில் பங்கேற்ற மாநில அளவிலான போட்டி எது?

முதன்முதலில், கோவையில் நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்றேன். அதில், 80 மீ. தடை தாண்டும் ஓட்டம், நீளந்தாண்டுதல் ஆகியவற்றில் முதலிடமும், 100 மீ. ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்று தனிநபர் சாம்பியன் ஆனேன். அதன்பிறகு, மாநில அளவில் 8 போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன், அவற்றில் சுமார் 20 பதக்கங்களைக் கைப்பற்றியிருக்கிறேன். இரு தனிநபர் சாம்பியன் பட்டமும் பெற்றிருக்கிறேன். தேசிய அளவில் எனது பதக்க எண்ணிக்கை 15.

நீங்கள் முதன்முதலில் கலந்துகொண்ட தேசியப் போட்டி எது? அதில் பதக்கம் கிட்டியதா?

எட்டாம் வகுப்பு படிக்கும்போது, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய தடகளப் போட்டியில் பங்கேற்றேன். அதில், 80 மீ. தடை தாண்டும் ஓட்டம், 4X100 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் வெண்கலப் பதக்கம் பெற்றேன்.

நீங்கள் புதிய சாதனை புரிந்த போட்டிகள் பற்றிக் கூறுங்கள்...

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த நவம்பரில் நடந்த தேசிய தடகளப் போட்டியில் 100 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் புதிய போட்டி சாதனை படைத்தேன். அதேபோல, ஜனவரியில் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடந்த 16 வயதுக்கு உட்பட்டோர் தேசிய தடகளப் போட்டியில் 100 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் நான் புதிய போட்டி சாதனை யுடன் தங்கப் பதக்கம் வென்றேன். அப்போட்டியில் நான் 4X100 மீ. தொடர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

வேறு?

மதுரையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாநில தடகளப் போட்டியில் நீளந்தாண்டுதலில் புதிய சாதனை படைத்தேன்.

உங்களின் சமீபத்திய வெற்றி?

டெல்லியில் நடைபெற்ற ‘கேலோ இந்தியா’ போட்டியில் இரு பதக்கங்கள் தட்டிவந்தேன். இந்தப் போட்டி, மிகச் சிறப்பான ஏற்பாடுகளுடன், சர்வதேச தரத்தில் நடத்தப்பட்டது.

நீளந்தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம் இரண்டில் நீங்கள் முன்னுரிமை கொடுப்பது எதற்கு?

இவை இரண்டிலும் நான் தடை தாண்டும் ஓட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறேன். இந்தப் பிரிவில் ஏற்கனவே நிறைய சாதித்திருக்கிற எங்கள் அகாடமி சீனியர்கள் காயத்ரி, தீபிகா ஆகியோர் எனக்கு மிகுந்த ஊக்கமாகத் திகழ்கிறார்கள்.

தடை தாண்டும் வீராங் கனையான உங்களுக்கு, நிஜத்தில் தடையாக இருப்பது எது?

எங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலைமைதான். ஆட்டோ ஓட்டுநரான எங்கப்பாவின் வருமானத்தை நம்பித்தான் எங்கள் குடும்பம் நடக்கிறது. மிகுந்த பணக்கஷ்டத்துக்கு இடையிலேயே அவர் ஒவ்வொரு போட்டிக்கும் என்னை அனுப்பி வைக்கிறார். கடன் வாங்கிப் பணம் கொடுத்தாவது என்னைப் போட்டிகளில் பங்கேற்க வைக்க அப்பா நினைப்பார். அவர் படும் சிரமத்தைப் பார்த்தே, நாம் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற தீவிரத்துடன் போட்டிகளில் களமிறங்குகிறேன்.

உங்கள் வீட்டில் வேறு யாருக்கும் விளையாட்டில் ஆர்வம் இருக்கிறதா?

ஏழாம் வகுப்பு படிக்கும் தம்பி சாம்வேல், என்னைப் பார்த்து தற்போது தடகளத்தில் ஆர்வம்கொள்ள ஆரம்பித்திருக்கிறான்.

உங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யார் யார்?

எனக்கு ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உண்டு. எனது ஒவ்வொரு முயற்சியிலும் கடவுள் துணைநிற்பதாக நம்புகிறேன். அடுத்ததாக, செயின்ட் ஜோசப் அகாடமி, இதன் பயிற்சியாளர் நாகராஜ் இல்லாவிட்டால் நான் தடகளத்தில் இந்த அளவு உயர்ந்திருக்க முடியாது. பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியிலும் என்னைத் தாங்கிப்பிடிக்கும் பெற்றோர், எங்கள் பள்ளி நிர்வாகமும் எனது பின்னணியில் உள்ளனர்.

தடகளத்தில் உங்களின் உச்ச இலக்கு?

ஆசிய, காமன்வெல்த் போட்டிகளிலும், ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும்!

‘தடைகளை’ தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் தபிதாவின் உயர்ந்த இலக்குகள் நனவாக வாழ்த்துவோம். 

Next Story