ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக புதிய ரெயில் நிறுத்தம்!
ஒரே ஒரு பள்ளி மாணவி மற்றும் அவரது பாட்டிக்காக புதிய ரெயில் நிறுத்தம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
ரஷியாவில், கரினா கோஸ்லோவா என்ற 14 வயதுச் சிறுமி பள்ளி சென்றுவர உதவும்வகையில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் முர்மான்ஸ்க் ரெயில் தடத்தில் அமைந்திருக்கும் போயாகோண்டா கிராமத்தில் புதிய ரெயில் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
சிறுமி கரினா கோஸ்லோவாவின் பாட்டி நடாலியா கோஸ்லோவா ஒரு முன்னாள் மழலையர் பள்ளி ஆசிரியர். இவர் தினமும் தனது பேத்தி கரினா உட்பட, பிற பகுதியின் மற்ற குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதற்காக சுமார் 10 ஆண்டுகளாக நீண்ட தூரம் பயணம் செய்து வந்தார்.
“நாங்கள் தினமும் கியாசியா ரெயில் நிலையத்துக்குச் செல்லும் ரெயிலைப் பிடிப்போம். வழியில் வரும் குழந்தைகளையும் உடன் அழைத்துக்கொள்வோம். ரெயில் நிலையத்தில் இருந்து குழந்தைகள் பள்ளிக்கூட பஸ்சுக்கு மாறி பள்ளிக்குச் செல்வார்கள்” என்று கூறுகிறார் நடாலியா.
சிறிய கிராமமான போயாகோண்டாவில், 50-க்கும் குறைவான குடும்பத்தினரே வசிக்கின்றனர். நடாலியாவால் இந்தக் கிராமத்தில் இருந்து பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படும் ஒரே மாணவி கரினா மட்டும்தான்.
ரெயில்வே ஊழியர்களை ஏற்றிக்கொள்ளவும், அவர்களை இறக்கிவிடவும் மட்டுமே முன்பு இங்கு ரெயில்கள் நின்றன. இதற்காக நிற்கும் ரெயில்களை விட்டால், நடாலியாவுக்கு வேறு வழியில்லை. அந்த மாதிரி சமயங்களில் சிறுமி கரினாவால் பள்ளிக்குச் செல்ல முடியாது.
கரினா தினமும் சக சிறார், சிறுமியருடன் சேர்ந்து 3 மணிநேரம் பயணம் செய்து பள்ளியை அடைகிறார். காலை 7.30 மணிக்குப் பள்ளிக்குக் கிளம்பும் இவர்கள், வீடு திரும்ப இரவு 9 மணி ஆகி விடுகிறது. இனி அவ்வளவு நேரம் ஆகாது எனக் கருதப்படுகிறது.
Related Tags :
Next Story