எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘பொக்கிஷங்கள்’


எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘பொக்கிஷங்கள்’
x
தினத்தந்தி 10 March 2018 1:38 PM IST (Updated: 10 March 2018 1:38 PM IST)
t-max-icont-min-icon

எகிப்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறைப் பகுதி ஒன்றில் இருந்து ஆபரணங்கள், கலைப்பொருட்கள் என்று பழங்காலப் பொக்கிஷங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கிப்து தலைநகர் கெய்ரோவின் தெற்கே அமைந்துள்ள மின்யா நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்தக் கல்லறைப் பகுதியில் அகழ்வாராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அவற்றை முடிக்க இன்னும் ஐந்தாண்டுகள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

அந்தப் பகுதியில் இருந்து 40 கல் சவப்பெட்டிகள், ஆபரணங்கள், கலைப்பொருட்கள் மற்றும் தங்கத்தால் ஆன ஒரு முகமூடி ஆகியவை கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன என எகிப்து தொல் பொருள் துறை அமைச்சர் கலீத் அல் எனானி தெரிவித்திருக்கிறார்.

அந்தப் புதைகுழிகள் பிற்கால பரோ மன்னர்கள் காலம் முதல் கி.மு. 300 வரையிலான டோலாமைக் சகாப்தம் வரையிலானவை என்று அவர் கூறினார்.

“இது புதிய கண்டுபிடிப்பு. மத்திய எகிப்தில் மேலும் பல தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைச் சேர்க்கப்போகிறோம்” என்று அவர் அறிவித்திருக்கிறார்.

கடந்த மூன்று மாதங்களில் எட்டு கல்லறைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பலவற்றை மண்ணுக்கு மேல் கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த ஆய்வின் தலைவர் முஸ்தபா வாஜிரி கூறினார்.

“அந்தக் கல்லறைகள் தோத் எனும் பழங்கால எகிப்து கடவுளுக்கு பூஜை செய்த மதகுருக்கள் அடக்கம் செய்யப்பட்டவை” என்று அவர் சொன்னார்.

ஹோரஸ் எனும் கடவுளின் மகனின் முகத்தைப் போன்று செதுக் கப்பட்ட மூடிகளை உடைய ஜாடிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று கூறிய அவர், “அந்த ஜாடிகளுக்குள் பதப்படுத்தப்பட்ட உடல் உறுப்புகள் உள்ளன” என்றார்.

அந்த ஜாடிகளுக்குள் யாருடைய உறுப்பு உள்ளதோ அவர்களின் பெயர் ஜாடிகளின் வெளிப்புறத்தில் செதுக்கப்பட்டுள்ளது.

சித்திர எழுத்துக்களில் ‘புத்தாண்டு வாழ்த்துகள்’ என்று பொறிக்கப்பட்ட ஆரம் ஒன்று கடந்த ஆங்கில புத்தாண்டுக்கு முந்தைய தினமான டிசம்பர் 31 அன்று கண்டெடுக்கப்பட்டது என்று கூறும் வாஜிரி, தற்செயலாக நிகழ்ந்தாலும், அந்த வினோதமான வாழ்த்து, பழங்காலத்தில் இறந்தவர்களிடம் இருந்து தங்களுக்குக் கிடைத்ததாகக் கூறுகிறார்.

சமீபத்தில், 4 ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முந்தைய மத குருக்களின் கல்லறைகளை எகிப்து தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

ஆக, எகிப்து ஓர் அரிய தொல்பொருள் சுரங்கமாகவே திகழ்ந்துகொண்டிருக்கிறது. 

Next Story