கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 11 March 2018 4:00 AM IST (Updated: 11 March 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் கடலூரில் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

கடலூர் முதுநகர்,

வங்கக்கடலில் தென் தமிழக பகுதியில் புதிய புயல் காரணமாக மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணி அறிவுரையின்பேரில் அதிகாரிகள் மீனவ கிராமங்களுக்கு தொடர்பு கொண்டு புயல் எச்சரிக்கை குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர். ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்களையும் விரைவில் கரைக்கு திரும்புவதற்கு அறிவுறுத்தி உள்ளனர்.

இதன் காரணமாக நேற்று அதிகாலையில் கடலுக்கு செல்ல வேண்டிய மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு செல்லவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான பைபர் மற்றும் விசை படகுகள் கடலூர் துறைமுகத்திலும், கடற்கரையிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஏற்கனவே மீன்பிடிக்க சென்ற படகுகளும் கரைக்கு திரும்பி வரத் தொடங்கி உள்ளன.

ஒரு சில மீனவர்கள் மட்டும் பைபர் மற்றும் விசைப்படகுகளில் கரையோர பகுதியில் மீன்பிடித்து வந்தனர். இதன் காரணமாக கடலூர் துறைமுகத்துக்கு மீன்வரத்து குறைந்து காணப்பட்டது. மேலும் நேற்று கடலூர் கடல் பகுதியில் மிதமான காற்று வீசியது. வெயிலின் தாக்கமும் சற்று குறைந்திருந்தது.

பரங்கிப்பேட்டை அருகே உள்ள அன்னங்கோவில் பகுதியை சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றனர். ஒரு சில மீனவர்கள் மட்டும் மீன்பிடிக்க செல்லவில்லை.

Next Story