தோட்டத்தை குத்தகைக்கு வாங்கி தருவதாக கூறி மோசடி புரோக்கருக்கு 3 ஆண்டு சிறை கோத்தகிரி கோர்ட்டு தீர்ப்பு


தோட்டத்தை குத்தகைக்கு வாங்கி தருவதாக கூறி மோசடி புரோக்கருக்கு 3 ஆண்டு சிறை கோத்தகிரி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 March 2018 2:45 AM IST (Updated: 11 March 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த புரோக்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோத்தகிரி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கோத்தகிரி,

கோத்தகிரியில் உள்ள கைத்தளா பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் தாஸ் (வயது 40). இவர் நிலம் வாங்கி விற்கும் புரோக்கராக செயல்பட்டு வந்தார். கோவையை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மனைவி ரத்னம் (வயது 40).

தாஸ், கடந்த 2012–ம் ஆண்டு கோத்தகிரி அருகே உள்ள மார்வளா பகுதியில் தனியாருக்கு சொந்தமான 100 ஏக்கர் தேயிலை தோட்டம் உள்ளதாகவும் அதில் 75 ஏக்கர் ஏற்கனவே குத்தகைக்கு கொடுக்கப் பட்டு விட்டதால் மீதமுள்ள 25 ஏக்கர் தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு வாங்கி தருவதாக ரத்தினத் திடம் கூறியுள்ளார்.

இதற்காக அவர் ரூ.2 லட்சம் பணத்தை ரத்தினத்திடம் வாங்கிக் கொண்டு, போலியான பத்திரம் தயாரித்து கொடுத்துள்ளார். இதையடுத்து ரத்னம் தனக்கு குத்தகைக்கு பெற்றுத் தந்ததாக தாஸ் கூறிய தேயிலை தோட்டத்தில் பச்சை தேயிலை பறிக்க தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தி உள்ளார்.

இதை அறிந்த தோட்டத்தின் உரிமையாளர் வந்து, தான் யாருக்கும் தோட்டத்தை குத்தகைக்கு கொடுக்க வில்லை என்று கூறி இலை பறிக்க விடாமல் தடுத்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரத்னம் ரூ.2 லட்சம் வாங்கி மோசடி செய்த தாஸ் மீது கோத்தகிரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கோத்தகிரி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதர், குற்றம் சாட்டப்பட்ட தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story