பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சார்பில் கையெழுத்து இயக்கம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சார்பில் கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 11 March 2018 3:00 AM IST (Updated: 11 March 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

ஊட்டி,

வங்கிகளில் வராக்கடன்களை வசூலிக்க கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும், பொதுத்துறை வங்கிகளை மேலும் வலுப்படுத்த வேண்டும், வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, வேண்டும் என்றே திட்டமிட்டு திரும்ப கட்டாத கடன்களை குற்றவியல் குற்றமாக கருத வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில், கையெழுத்து இயக்கம் ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இதில், வங்கி நிர்வாகிகள் லோகேஷ்வரன், கார்த்திக், பிரேம்குமார், மணி உள்பட வங்கி ஊழியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுனர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி கையெழுத்து பெற்றனர்.

இது குறித்து நீலகிரி மாவட்ட வங்கி ஊழியர் சங்க செயலாளர் ராஜ்குமார் கூறியதாவது:–

பொதுத்துறை வங்கிகளிடம் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யக் கூடாது. அந்த நிறுவனங்களின் அனைத்து சொத்துகளையும் அரசு ஏற்று, கடன் தொகையை வசூலிக்க வேண்டும். வங்கிகளின் வராக்கடன்கள் சம்பந்தமான நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.

பொதுத்துறை வங்கிகளுக்கு தேவையான அளவில் மூலதனம் மத்திய அரசால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் வங்கி சேவை கிடைக்காமல் பல கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் வங்கி கிளை தொடங்கி விவசாயிகளுக்கு உதவ வேண்டும். வங்கியில் உள்ள வைப்பு நிதிக்கு வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளுக்கு தேவையான மூலதனம் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். மண்டல கிராமப்புற வங்கிகளை தனியாருக்கு மத்திய அரசு கொடுக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 10 ஆயிரம் கையெழுத்துகள் பெறப்பட உள்ளது.

நாடு முழுவதும் 1 கோடி கையெழுத்து பெறப்பட்டு நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு மனுக்கள் அனுப்பி வைக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், மஞ்சூர் ஆகிய பகுதிகளில் வங்கி ஊழியர்கள் கிராம மக்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கி கையெழுத்து பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story