மாணவர்கள் சைக்கிளில் செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்: கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்


மாணவர்கள் சைக்கிளில் செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்: கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 March 2018 4:00 AM IST (Updated: 11 March 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

மாணவ-மாணவிகள் சைக்கிளில் செல்வதை பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும் என கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தியுள்ளார்.

காரைக்கால்,

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில், காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நேற்று உலக மகளிர் தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அதையொட்டி, விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நேற்றுக் காலை நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்து, அவரும் சைக்கிள் ஓட்டியபடி ஊர்வலத்தில் சென்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், மாவட்ட கலெக்டர் கேசவன், போலீஸ் டி.ஐ.ஜி சந்திரன், சப்-கலெக்டர் விக்ராந்த்ராஜா, போலீஸ் சூப்பிரண்டுகள் மாரிமுத்து, வம்சீதரரெட்டி மற்றும் போலீசார், தேசிய மாணவர் படையினர் (என்.சி.சி.), நாட்டு நலப்பணித் திட்ட மணவர்கள்(என்.எஸ்.எஸ்.) மற்றும் பல்வேறு சமூக அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டியபடி ஊர்வலமாக சென்றனர்.

இந்த ஊர்வலம் காரைக்கால் பாரதியார் வீதி, பி.கே.சாலை, காமராஜர் சாலை, தோமாஸ் அருள்வீதி, மாதாகோவில் வீதி வழியாக சென்று, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் நிறைவு பெற்றது.

தொடர்ந்து, கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள காமராஜர் திடலில் அரக்கோணத்திலிருந்து வந்த தேசிய பேரிடர் மீட்புபடையின் 4-வது பிரிவினர் நடத்திய பேரிடர் பாதுகாப்பு மற்றும் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை கவர்னர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:-

காரைக்கால் மாவட்டம் சின்னஞ்சிறிய பகுதி. மிகவும் அமைதியான, பாதுகாப்பான பகுதி. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பாதுகாப்பாக இருக்கும் பகுதி காரைக்கால்தான். நாம் ஒவ்வொருவரும், நமக்கான நியாயத்தை கேட்பதைவிட, கடமையை செய்ய முன்வரவேண்டும். குறிப்பாக நாம் அலட்சியமாக சாலை, சாக்கடை மற்றும் பொது இடங்களில் தூக்கியெறியும் குப்பைகளை, அரசு லட்சக்கணக்கில் காசு கொடுத்து தினமும் சுத்தம் செய்துவருகிறது. அதை முற்றிலும் தவிர்த்தால், அரசுக்கு செலவு குறையும். நமது குடியிருப்பும் சுத்தமாக இருக்கும். முக்கியமாக பிளாஸ்டிக் குப்பைகளை முற்றிலும் தவிர்க்கவேண்டும். இதை இன்னார்தான் செய்யவேண்டும் என்றில்லை. அனைவரும் ஒருங்கிணைந்து செய்யவேண்டும்.

அடுத்ததாக, குறைந்த தூரங்களுக்கெல்லாம் ஸ்கூட்டர், காரில் செல்வதை தவிர்க்கவேண்டும். அதுபோன்ற சமயங்களில் சைக்கிளில் செல்லவேண்டும். குறிப்பாக மாணவர்கள், மாணவிகள் சைக்கிளில் செல்வதை பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும். அதனால், உடல் ஆரோக்கியமாகும், புகையில்லாமல் சுற்றுச்சூழல் தூய்மையாகும். செலவுகள் குறையும். இங்குள்ள பேரிடர் மீட்புப்படையினர், அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேரிடர்கால பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்க முன்வரவேண்டும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி பேசினார். 

Next Story