கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட துப்புரவு பணியாளர்கள்


கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட துப்புரவு பணியாளர்கள்
x
தினத்தந்தி 11 March 2018 4:00 AM IST (Updated: 11 March 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்யக்கோரி பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்,

நிலக்கோட்டை பேரூராட்சியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் மனு கொடுக்க வந்தனர். அப்போது திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அவர்கள் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாங்கள் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் நிலக்கோட்டை பேரூராட்சி பகுதியில் துப்புரவு பணி செய்து வருகிறோம். எங்களில் சிலர் கடந்த 15 ஆண்டுகளாக துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், பேரூராட்சி துப்புரவு கண்காணிப்பாளர் ஒருவர் எங்களை கொச்சையாக பேசி திட்டுகிறார்.

மேலும் பழைய பாட்டில், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, அதனை விற்று மேல் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டினார். இதுதொடர்பாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். இதைத்தொடர்ந்து, அவரை அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு இடமாற்றம் செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ஆனால், இதுவரை அவரை மாற்றாததால் நிலக்கோட்டை பேரூராட்சியிலேயே பணி செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 8-ந்தேதி எங்களை சாதி பெயரை சொல்லி திட்டியதுடன், மிரட்டவும் செய்தார். எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன் இடமாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story