குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 March 2018 3:45 AM IST (Updated: 11 March 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங் களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நத்தம்,

நத்தம் அருகே லிங்கவாடி மேற்குதெரு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் தொட்டியில் ஏற்றி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்மோட்டார் பழுதானதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

தங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி லிங்கவாடி-பாலமேடு சாலையில் காலிக்குடங் களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் ஒன்றிய கூடுதல் ஆணையாளர் லாரன்ஸ், கிராம நிர்வாக அலுவலர் தங்கவேலு, லிங்கவாடி ஊராட்சி செயலர் அன்புசெல்வம் மற்றும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மின்மோட்டாரை பழுதுநீக்கம் செய்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story