வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி மாவட்ட வன அதிகாரி தகவல்


வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி மாவட்ட வன அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 11 March 2018 4:45 AM IST (Updated: 11 March 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட வன அதிகாரி தெரிவித்து உள்ளார்.

பவானிசாகர்,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட வன அதிகாரி தெரிவித்து உள்ளார்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், தலமலை, டி.என்.பாளையம் ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் புலி, சிறுத்தைப்புலி, யானை, காட்டெருமை, கரடி, மான்கள், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் செடி, கொடிகள் காய்ந்து விட்டன. எனவே வனப்பகுதியில் தீப்பற்றினால் அங்குள்ள மரங்கள் எரிந்து நாசம் ஆகிவிடும். மேலும் வனவிலங்குகளும் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்படும். இதை கருத்தில் கொண்டு வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 3 மீட்டர் அகலத்துக்கு பல கிலோ மீட்டர் நீளத்துக்கு செடி, கொடிகளை வெட்டி அகற்றி தீத்தடுப்பு கோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் 7 வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளான ஓடைகள், குளம், குட்டை, தடுப்பணை போன்றவை தண்ணீரின்றி வற்றிவிட்டன. அவ்வாறு தண்ணீர் வற்றிய இடங்களை வனத்துறையினர் கண்டறிந்து அந்த பகுதிகளில் தற்காலிக தொட்டிகள் அமைத்து அங்கு வாகனங்கள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பும் பணி நடைபெற்று வருகின்றன. இதனால் வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளின் தாகம் தீர்க்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை மாவட்ட வன அதிகாரி பத்மா தெரிவித்துள்ளார்.

Next Story