உச்ச நீதிமன்றத்தில் வாதாடியதற்கு கட்டணம் வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் அரசு வக்கீல் வழக்கு


உச்ச நீதிமன்றத்தில் வாதாடியதற்கு கட்டணம் வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் அரசு வக்கீல் வழக்கு
x
தினத்தந்தி 11 March 2018 3:15 AM IST (Updated: 11 March 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

உச்ச நீதிமன்றத்தில் வாதாடியதற்கு கட்டணம் வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் அரசு வக்கீல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மதுரை,

தஞ்சாவூர் ஸ்ரீராம்நகரை சேர்ந்த பாலாஜி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

நான் உச்சநீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறேன். கடந்த 2011–ல் உச்ச நீதிமன்றத்திற்கான தமிழக அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டேன். கடந்த 9.6.2011 முதல் 15.7.2017 வரை 6 ஆண்டுகள் தமிழக அரசு வக்கீலாக பணியாற்றியுள்ளேன். மாநகராட்சிகள், நில நிர்வாகம், வருவாய் நிர்வாகம், மின்சார வாரியம், வீட்டுவசதி வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழுள்ள 130 துறை பிரிவுகளுக்காக ஆஜராகினேன்.

சுமார் 1,600 வழக்குகளில் 6,700 முறை விசாரணைக்கு ஆஜரானேன். உள்துறை, பொதுப்பணித்துறை, கனிம வளத்துறை என பல முக்கிய துறைகளின் வழக்கிற்காக தினசரி ஆஜரானேன். துறைகளின் கீழ் ஆஜரான வழக்குகளுக்கான வழக்கறிஞர் கட்டணத்தை கேட்டு அவ்வப்போது பில்கள் அனுப்பினேன். ஒரு சில பில்களை தவிர பெரும்பாலும் கட்டணம் வழங்கப்படவில்லை. இதனால் எனக்கு வழங்க வேண்டிய வழக்கறிஞர் கட்டணத்தை தரக்கோரி, தமிழக தலைமை செயலருக்கு மனு அனுப்பினேன். அவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்குரிய கட்டணத்தை வழங்காவிட்டால் எனக்கு பெரும் இழப்பு ஏற்படும். எனவே, நீதிமன்றம் தலையிட்டு எனக்கு வழங்க வேண்டிய கட்டணங்களை அந்தந்த துறையினர் வழங்க உத்தரவிட வேண்டும். முதலில் குறைந்தபட்சம் 50 சதவீத கட்டணத்தையாவது வழங்க வேண்டுமென தமிழக தலைமைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Next Story