இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்


இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 March 2018 4:15 AM IST (Updated: 11 March 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் பி. சின்னதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுந்தரவிமலநாதன் வரவேற்றார். வேப்பத்தூர் வரதராஜன், கபிஸ்தலம் எஸ்.முருகேசன், தேனாம்படுகை இயற்கை விவசாயி பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

இயற்கை விவசாயத்தின் அவசியத்தை இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளுக்கும் உணர வைத்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு தமிழக அரசு கல்லணையில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்.தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் விழிப்புணர்வு பெற பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.

2016-17-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் வேளாண்மைத்துறை இழப்பீடு வழங்காமல் ஏமாற்றிவருகிறது. அதனை கண்டித்து விவசாயிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிபடி திருவைக்காவூர்- தத்துவாஞ்சேரி இடையே கொள்ளிடத்தில் கதவணை மற்றும் ஆறுகளில் தடுப்பணைகள் அமைக்க தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.

பல்வேறு தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த பின்னரே கூட்டுறவு அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும். தமிழக அரசு 15 ஆண்டுகளாக புதிய மின்இணைப்பிற்காக காத்துகிடக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு உடனடியாக மின்இணைப்பை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ராமநாதன் நன்றி கூறினார். 

Next Story