பள்ளிகொண்டா பேரூராட்சியில் 15 இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகும் அவலம்


பள்ளிகொண்டா பேரூராட்சியில் 15 இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகும் அவலம்
x
தினத்தந்தி 11 March 2018 6:00 AM IST (Updated: 11 March 2018 6:00 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டா பேரூராட்சியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனை சரி செய்ய வேண்டிய பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அணைக்கட்டு,

அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 35 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணறு மூலமும், பாலாறு மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் பள்ளிகொண்டாவில் சன்னதி தெரு, மேல்மாடவீதி உள்பட 15 இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. ஒரு மாதமாகியும் உடைப்பை சரி செய்யாததால் குழாயிலிருந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. அந்த வழியாக பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சென்றும் பாராமுகமாக உள்ளனர்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் உடைந்த குழாய்களை சரி செய்ய ஆர்வம் காட்டவில்லை. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “1981-ம் ஆண்டு பதிக்கப்பட்ட குழாய்கள் தான் தற்போது புழக்கத்தில் உள்ளன. அவற்றின் மூலம் பாலாறு மற்றும் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குழாய்கள் பராமரிப்புக்கு மட்டும் மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை பேரூராட்சி நிர்வாகம் செலவிடுகிறது. புதிய குழாய்களை பதித்தால் தான் பராமரிப்பு செலவு குறையும்.

தற்போது குழாய்களில் பழுது நீக்குவதையும் பேரூராட்சி நிர்வாகம் செய்வதில்லை. அதேபோல் பழுதை சரி செய்வதற்காக தோண்டப்படும் பள்ளங்களையும் சரிவர மூடுவதில்லை. அதனால் விபத்துகளும் ஏற்படுகிறது.

மோர்தானா அணையிலிருந்து வரும் கால்வாய் வழியாக திறந்த நிலையில் குழாய் உள்ளது. அந்த குழாய் மூடப்படவில்லை. இந்த இடத்தில் பழுது பார்க்கும்போது கால்வாயை உடைத்து விடுகிறார்கள். இதே நிலை நீடித்தால் குடிநீர் வீணாகி கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. உடைப்பு ஏற்பட்ட குழாய்களை சரி செய்ய பேரூராட்சி அலுவலர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குழாய்களை சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story