உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 11 March 2018 6:38 AM GMT (Updated: 11 March 2018 6:38 AM GMT)

செல்போன் விற்கும் கடைகள் சிலவற்றில் தொடர்ச்சியாக சில கொள்ளை சம்பவங்கள் நடந்தன. ஒரே மாதிரியான முறையில் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

செல்போன் விற்கும் கடைகள் சிலவற்றில் தொடர்ச்சியாக சில கொள்ளை சம்பவங்கள் நடந்தன. ஒரே மாதிரியான முறையில் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. கடைகளில் இருந்த விலை உயர்ந்த செல்போன்களை மட்டும் எக்கச்சக்கமாக அள்ளிக் கொண்டுபோயிருந்தார்கள். கொள்ளையர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.

கொள்ளை போன செல்போன்களின் ஐ.எம்.ஈ.ஐ. எண்களை சேகரித்தார்கள். தொடர்ந்து அவைகளை கண்காணித்துக்கொண்டிருந்தபோது, சில வாரங்கள் கழித்து அவைகளில் சில போன்கள் செயல்பட்டுக்கொண்டிருப்பதை கண்டுபிடித்தார்கள். அவற்றில் இணைக்கப்பட்டிருந்த சிம் கார்டுகளை வைத்து, அவைகளை பயன்படுத்திக்கொண்டிருப்பது யார் என்பதை அறிய முயற்சித்தார்கள். அவைகளில் சுமார் 15 போன்கள், மேற்கு வங்காள மாநிலத்தின் ஒருபகுதியில் இயங்குவதாக ‘லொக்கேஷன்’ காட்டியது.

போலீசார் அந்த மாநிலத்திற்கு சென்று குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் அந்த தகவல், செல்போன்களை பயன்படுத்திக்கொண்டிருந்தவர்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. உடனே அவர்கள் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்கள்.

போலீசார் அடுத்து என்ன செய்வது? என்று திணறிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு செல்போன் மட்டும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பதையும், அது அங்குள்ள ஒரு குறிப்பிட்ட போலீஸ் நிலையத்தின் அருகில் லொக்கேஷன் காட்டுவதையும் கண்டுபிடித்து, அந்த இடத்தை அடைந்தார்கள். அந்த போன், அதே போலீஸ் நிலையத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்த போலீஸ்காரர் கையில் இருந்தது. அது பற்றி அவரிடம், துப்புதுலக்க சென்ற போலீசார் கேட்டபோது, சில நாட்களுக்கு முன்பு இன்னொருவரிடமிருந்து விலைக்கு வாங்கியதாக அவர் சொன்னார். யார் அவருக்கு செல்போனை விற்றது என்ற முழு விவரத்தை தெரிவிக்கவும் அவர் முன்வரவில்லை.

இந்த நிலையில் செல்போன்களை கொள்ளையடித்தவர்கள் அங்குள்ள குறிப்பிட்டதொரு கிராமத்தில் பதுங்கியிருப்பது இந்த போலீஸ் குழுவுக்கு தெரிந்தது. ஆனால் அந்த கிராமத்திற்குள் போலீஸ் செல்லவேண்டும் என்றால், முதலில் அந்த பகுதியில் உள்ள ஆளுங்கட்சி பிரமுகரிடம் அனுமதி வாங்கவேண்டும் என்றார்கள். அனுமதி வாங்காமல் சென்றால், போலீசின் உயிருக்குகூட ஆபத்து ஏற்படலாம் என்று உள்ளூர் போலீஸ் நிலையத்தில் இருந்து தகவல் சொன்னார்கள். அவர்கள் சொன்னதுபோல் முதலிலே உள்ளூர் அரசியல்வாதியிடம் அனுமதி பெற்றால், அவர் அப்போதே அந்த கொள்ளையர் களுக்கு தகவல்கொடுத்து தப்ப அனுமதித்துவிடுவார் என்பது இந்த போலீஸ் குழுவுக்கு தெரியும். அதுமட்டுமின்றி கொள்ளை போன செல்போனை வைத்திருக்கும் போலீஸ்காரரே முதல் வேலையாக அந்த கொள்ளையர்களுக்கு தகவல் சொல்லி, அவர்களை தப்பிச்செல்லவைத்திருப்பார் என்பதும் இந்த போலீஸ் குழுவுக்கு தெரியும். அதனால் பொறுமையாக அங்கேயே தங்கியிருந்து ரகசிய விசாரணையில் இறங்கினார்கள்.

விசாரணையில் கிடைத்த தகவல்கள் கவனிக்கத்தகுந்தவை. ‘மேற்கு வங்காளத்தில் அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் அனைவருக்கும் எப்படி கொள்ளையடிப்பது, கொள்ளையடித்துவிட்டு எப்படி தப்பிப்பது என்றெல்லாம் முதிய கொள்ளையர்கள் வகுப்பு நடத்துவார்கள். அவர்கள் முழுபயிற்சி பெற்ற பின்பு, முதலில் ஒருவர் மட்டும் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலத்திற்கு வருவார். குறிப்பிட்ட கடையை தேர்ந்தெடுத்து அதை படம் பிடித்துக்கொள்வார். அந்த கடையின் கட்டுமானம் எப்படி அமைந்திருக்கிறது, சாலை வசதி எப்படி இருக்கிறது, மக்கள் நடமாட்டம் எப்போது குறையும் என்பதை எல்லாம் நோட்டமிட்டுவிட்டு அவர், மேற்கு வங்காளத்தில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு செல்வார்.

அவர் கொடுக்கும் தகவலை அடிப்படையாகவைத்து, எப்படி கொள்ளையடிக்கவேண்டும், அதற்கு கைதேர்ந்தவர்கள் யார் என்பதை எல்லாம் முடிவு செய்து அங்கு வைத்து துல்லியமாக திட்டம் தீட்டுவார்கள். அதன் பின்பு அதற்காக நியமிக்கப்படும் கொள்ளை கோஷ்டி அப்படியே இங்கு வரும். வேலை தேடி வந்ததுபோல் வந்து, நோட்டமிட்டு சரியான தருணம் பார்த்து கொள்ளையடித்துவிட்டு தங்கள் மாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிடும். அங்கு இவர்களை எதிர்பார்த்து சில வியாபாரிகள் காத்திருப்பார்கள். எல்லாவற்றையும் விற்று, பணத்தை வாங்கி சில மாதங்கள் செலவிட்டு விட்டு மீண்டும் தென் மாநிலத்தை நோக்கி கொள்ளைக்காக கிளம்புவார்கள்..’ இப்படி சொல்கிறது அந்த விசாரணை அறிக்கை.

பிடிக்கச் சென்ற போலீசார் காத்திருந்து, ஒரு சில கொள்ளையர்கள் கிராமத்தை விட்டு வெளியே வரும்போது பிடித்தார்கள். சிலரை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

நாம் சொல்ல வர்ற விஷயம் என்னென்னா.., அந்த கிராமத்தில் பயிற்சி பெற்ற சில இளைஞர்கள் தமிழ்நாட்டில் எங்கே என்ன கிடைக்கும் என்று அலைந்து கொண்டிருக்கிறார்களாம்..!

- உஷாரு வரும்.

Next Story