மாணவர்களுக்கு கார் வசதி


மாணவர்களுக்கு கார் வசதி
x
தினத்தந்தி 11 March 2018 12:59 PM IST (Updated: 11 March 2018 12:59 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆசிரியர்களே தினமும் மாணவர்களை வீட்டில் இருந்து பள்ளிக்கு அழைத்து வரும் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆசிரியர்களே தினமும் மாணவர்களை வீட்டில் இருந்து பள்ளிக்கு அழைத்து வரும் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக வாகனங்களை இயக்கும் டிரைவர்களாகவும் மாறி இருக்கிறார்கள். இந்த வித்தியாசமான பள்ளிக்கூடம் பந்த்வால் அருகில் உள்ள பானேமங்களூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது.

7-ம் வகுப்பு வரை இருக்கும் அந்த பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து கொண்டிருந்த நிலையில் ஆண்டுதோறும் படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை குறைய தொடங்கி இருக்கிறது. அதனால் பள்ளிக்கூடத்தை மூடும் நிலையும் உருவாகி இருக்கிறது. அதனை தடுப்பதற்காகவும், பல மைல் தூரத்தில் இருந்து பள்ளிக்கு வந்து கொண்டிருக்கும் மாணவர்களின் சிரமத்தை போக்குவதற்காகவும் ஆசிரியர்களே டிரைவர் பணியையும் கூடுதலாக கவனிக்கிறார்கள்.

இதற்காக ஆசிரியர்களின் பங்களிப்புடன் பள்ளி நிர்வாகம் சார்பில் இரண்டு கார்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. ஆசிரியர்கள் நூருதீன் (வயது 47), ராதா கிருஷ்ண நாயக் (45) ஆகிய இருவரும் தினமும் குறைந்தபட்சம் ஆறு முறை கார்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் 16 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்து மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகிறார்கள். அதிலும் ஆசிரியர் நூருதீன் 27 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பள்ளிக்கு வந்து கொண்டிருக்கிறார். பின்னர் பள்ளியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு மாணவர்களை அழைக்க புறப்படுகிறார். எனினும் 9 மணிக்குள்ளாக மாணவர்கள் அனைவரையும் பள்ளிக்கு அழைத்து வந்து விடுகிறார்.

‘‘ஆசிரியராக மட்டுமின்றி ஓட்டுனராகவும் என் பணியை செய்வதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவது மன நிறைவு தருகிறது. நான் மங்களூருவில் இருந்து பணிக்கு வந்து கொண்டிருக்கிறேன். காலையில் 8 மணிக்கு பள்ளியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு மாணவர்கள் வீடுகளுக்கு செல்வேன். அவர்கள் என் வருகைக்காக முன்கூட்டியே வாசலில் காத்திருப்பார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு வருகிறார்கள். என் பயணம் அவர்களுடன் தொடர்ந்து கொண்டிருப்பது சந்தோஷமாகவே இருக்கிறது’’ என்கிறார் நூருதீன்.

கடந்த 9 ஆண்டுகளாக ஆசிரியர்கள் இருவரும் இந்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக கூடுதல் ஊதியம் பெறுவதில்லை. மாணவர்களும் இலவசமாகவே கார்களில் பள்ளிக்கு அழைத்துவரப்படுகிறார்கள்.

‘‘மாணவர்களில் பெரும்பாலானோர் ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். கார்களில் பள்ளிக்கு வருவது அவர்களுக்கு ஒரு கனவாகத்தான் இருந்தது. அதனை நாங்கள் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்’’ என்கிறார் மற்றொரு ஆசிரியர் ராதாகிருஷ்ண நாயக்.

கார்கள் வாங்குவதற்கு ஆசிரியர்கள் நிதி உதவி செய்திருக்கிறார்கள். மேலும் கார்களின் பராமரிப்புக்காகவும், டீசல் செலவு களுக்காகவும் வருடத்திற்கு பல ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்கிறார்கள்.

‘‘2009-10 கல்வி ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போயிருந்தது. மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவதற்கு வாகனங்களை பயன்படுத்த முடிவு செய்தோம். அதற்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்பு கொடுத்ததால் கட்டணம் வசூலிக்காமல் இலவசமாகவே மாணவர்களை அழைத்து வருவது சாத்தியமானது. நிறைய மாணவர்கள் 7 கிலோ மீட்டர் தூரத்தில் வசித்து வருகிறார்கள். ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுவதால் காலையிலும், மாலையிலும் மாணவர்கள் எளிதாக பள்ளிக்கு வந்து செல்கிறார்கள். அதேவேளையில் மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்வதில்லை. அதனால் வாகன பராமரிப்புக்கு கூடுதல் கவனம் செலுத்துகிறோம். மேலும் புதிய வாகனங்கள் வாங்குவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம்’’ என்கிறார், பள்ளி தலைமை ஆசிரியர் பக்ரூதீன்.

தற்போது இந்த பள்ளியில் 185 மாணவர்கள் படித்து வருகிறார்கள். பள்ளிக்கு சென்று வர வாகன வசதி இருப்பதால் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயரத் தொடங்கி இருக்கிறது.

Next Story